சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சியை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த பொருட்காட்சி பிப்ரவரி இறுதிவரை நடைபெறுகிறது.சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 35ம் பொருட்காட்சி நடைபெறுகிறது.
பொருட்காட்சியில் 42 அரசு அரங்குகள், 115 கடைகள், 26 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கிராமிய சூழலை விளக்கும் வகையில், சிற்றூர் சுற்றுலா, பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள், மலையேற்றம், சறுக்கு விளையாட்டு போன்ற வீரசாகச விளையாட்டுகள், அமர்நாத் பனி லிங்கம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 14.45 லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு 20 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவு கட்டணம் ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5. மாணவர்களுடன் வரும் பெற்றோருக்கும் கட்டணம் ரூ.5 தான். தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பொருட்காட்சி நடைபெறும்.
நுழைவு சீட்டுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். பிப்ரவரி இறுதி வரை பொருட்காட்சி நடக்கும். பொருட்காட்சியை 24ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.