பூமி, பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட இயற்கை அம்சங்களை பாதிக்காத வகையில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் சர்வதேச 'பொறுப்பு மிக்க சுற்றுலா' மாநாட்டை மத்திய சுற்றுலா அமைச்சகம் டிசம்பரில் நடத்த உள்ளது.
புவியியல் வளங்கள், பருவநிலை மாற்றங்கள் போன்ற இயற்கை அம்சங்கள் பாதிக்கப்படாத வகையில் சுற்றுலாவை, மேம்படுத்த ஐ.நா வளர்ச்சித் திட்டத்தின் உதவியுடன் 'பொறுப்பு மிக்க சுற்றுலா' என்ற சிறப்பு திட்டத்தை மத்திய சுற்றுலா அமைச்சகம் வகுத்துள்ளது.
இந்த கருத்தை வலியுறுத்தும் நோக்கில் சர்வதேச அளவிலான மாநாட்டுக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் இந்த மாநாடு டிசம்பரில் நடக்க உள்ளது. மாநில சுகாதாரத் துறைகள், நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் துறை நிபுணர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கு முன்னதாக மண்டல அளவிலான கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. முதல் கருத்தரங்கு கேரள மாநிலம் கொச்சியில் நாளை (23.09.2008) நடக்கிறது. பொறுப்புள்ள சுற்றுலாவின் பரிமாணங்கள் என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடக்கிறது.
அடுத்த கருத்தரங்கு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் செப்டம்பர் 29ஆம் தேதியும், கருத்தரங்கு அக்டோபர் 14ஆம் தேதி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலும் நடக்கிறது. கிராமங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் மக்களை சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
சென்னையில் அக்டோபர் 21ஆம் தேதி கருத்தரங்கு நடக்கிறது. கழிவு மேலாண்மை, இது குறித்த பயிற்சி, திறன் மேம்பாடு குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
பொறுப்புள்ள சுற்றுலாவுக்கும் பருவநிலை மாற்றங்களுக்கும் உள்ள தொடர்புகள், சுற்றுச் சூழல், சுகாதாரம், கழிவு மேலாண்மை ஆகியவை குறித்து இதில் முழுதாக விவாதிக்கப்படும். இந்த மண்டல கருத்தரங்குகளில் தெரிவிக்கப்படும் கருத்துகள் குறித்து சர்வதேச மாநாட்டிலும் விவாதிக்கப்படும்.