தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சலுகைகள் அளிக்கும் வகையில் பிளாட்டினம் மற்றும் தங்க அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விடுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சலுகைகளுடன் கூடிய 'பிளாட்டினம் அட்டை' மற்றும் 'தங்க அட்டை' ஆகியவற்றை அறிமுகம் செய்யும் புதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.
அதன்படி ரூ.5,000 மதிப்புடைய பிளாட்டினம் அட்டையை ஒருவர் பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ரூ.1000 மதிப்புடைய தங்க அட்டையை ஒருவர் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
சுற்றுலா பயணிகள் இந்த அட்டைகளைப் பயன்படுத்தி மலைப்பிரதேசங்களான உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலா விடுதிகளின் கட்டணத்தில் பருவ காலங்களான ஏப்ரல் முதல் ஜூன் 15ஆம் தேதி வரை 10 விழுக்காடு தள்ளுபடியும், மற்ற நாட்களில் 20 விழுக்காடு தள்ளுபடியும் பெறலாம்.
பருவ காலத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே விடுதிகளில் சலுகை கட்டணத்தில் தங்கும் வசதி அளிக்கப்படும். மற்ற விடுதிகளில் ஆண்டு முழுவதும், கட்டணத்தில் 20 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் உணவு விடுதிகள் மற்றும் படகு இல்லங்களின் கட்டணத்தில் ஆண்டு முழுவதும் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
இத்தகைய சலுகைகள் கொண்ட அட்டைகள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்து, முதல் பிளாட்டினம் அட்டையைப் கலைமாமணி சோபனா ரமேசுக்கும், முதல் தங்க அட்டையைத் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் வழங்கினார்.