மதுரை- திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா!
, சனி, 5 ஜூலை 2008 (11:50 IST)
மதுரை-திருப்பதி சுற்றுலா திட்டம் மதுரையில் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே சுற்றுலா கழகம் செய்துள்ளது.இந்த ஆன்மிக சுற்றுலாவை இந்தியன் ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஏற்பாடு செய்துள்ளது.இது குறித்து அதன் துணைப் பொதுமேலாளர் ரவிக்குமார் கூறுகையில், மதுரை-திருப்பதி சுற்றுலா திட்டம் மதுரையில் இன்று (5ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் மதுரையில் இருந்து திருப்பதிக்கு பயணிகள் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
திட்டத்தின் துவக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். அங்குள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றில் வழிபாடு நடத்திவிட்டு, மதிய உணவு முடித்த பிறகு அங்கிருந்து திருத்தணி புறப்படுகிறோம்.திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசனம் முடித்துவிட்டு ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி
செல்கிறோம். அந்த இடத்தில் இருந்து இரவு 7 மணி அளவில் கீழ்திருப்பதி சென்று தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திங்கட்கிழமை அதிகாலை, காலை என்று இரண்டு வேளைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்யலாம்.
திருப்பதியில் இருந்து நேராக திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோவிலுக்குச் செல்கிறோம். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு, வேலூர் பொற்கோவிலுக்கு (நாராயணி திருக்கோவில்) புறப்படுகிறோம். இரவில் வேலூர் பொற்கோவிலை மின்னொளியில் பார்க்கும் வகையில் பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு உணவை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை மதுரை வந்தடைகிறோம். 3 இரவு, 2 பகல் கொண்ட இந்த சுற்றுலா திட்டத்தில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.2,500 மட்டுமே. திருப்பதியில் அதிகாலையில் சிறப்பு தரிசனம் செய்ய விரும்பினால் ரூ.2,750 செலுத்த வேண்டும்.
பேருந்து போக்குவரத்து (ஏ.சி.இல்லாதது), தங்கும் விடுதி, 3 வேளை சைவ சாப்பாடு, திருமலையில் சிறப்பு தரிசனம் ஆகிய அனைத்தும் இந்த கட்டணத்தில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா மற்றும் தகவல் மையத்தை 98400 01666 அல்லது 94440 85144 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ரவிகுமார் கூறினார்.