குற்றாலம் மற்றும் கேரளாவில் உள்ள இயற்கை சுற்றுலா மையமான தென்மலைக்கும், திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கும் இரண்டு புதிய சுற்றுலா பயணத் திட்டங்களை இந்தியன் ரெயில்வே உணவகம் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிவித்துள்ளது.
இந்த இரண்டு சுற்றுலாத் திட்டங்களும் வரும் 10-ந் தேதி முதல் துவங்கி நடத்தப்பட உள்ளது.
இது குறித்து இந்தியன் ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் துணைப் பொதுமேலாளர் ரவிகுமார் கூறுகையில், ரெயில் பயணிகளுக்காக புதிதாக இரண்டு பயணத் திட்டங்களை அறிமுகம் செய்கிறோம். முதலாவதாக குற்றாலம்-தென்மலை ரெயில் சுற்றுலா பயணத் திட்டம் ஆகும்.
அதன்படி, ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு பொதிகை ரெயில் (2-ம் வகுப்பு படுக்கை வசதி) புறப்படும். மறுநாள் குற்றாலத்தில் முதன்மை அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, குற்றாலநாதர் கோவில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு குற்றாலத்தில் இரவு தங்க வைக்கப்படுவர்.
அடுத்த நாள் அங்கிருந்து கேரளாவில் உள்ள பால் அருவி. பின்னர் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை சுற்றுலா மையமான தென்மலை கல்லடா அணை, செந்தூரணி வன சரணாலயத்தையும் பார்வையிட்டுவிட்டு, ஏரியில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகு சுற்றுலா செல்லவும் பயணிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தென்மலையில், இசையுடன்கூடிய செயற்கை நீருற்றைப் பார்த்துவிட்டு இரவு குற்றாலம் வந்து தங்கிவிட்டு, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை காரையாறு பாண தீர்த்தம் அருவி, அகஸ்தியர் அருவி பாபநாசம் சிவன் கோவிலுக்குச் சென்று தரிசித்துவிட்டு தென்காசியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவே பொதிகை விரைவு ரயிலில் புறப்பட்டு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சென்னை திரும்புகிறோம்.
3 பகல் 2 இரவு கொண்ட இந்த சுற்றுலா பயணத் திட்டத்திற்கு ஒருவருக்கான கட்டணம் ரூ.4,200. கணவன், மனைவி, குழந்தை என்று 3 பேராக வந்தால் தலா ரூ.3,200 வீதம் ரூ.9,600 செலுத்தினால் போதும். 9 பேருக்கு மேல் குழுவாக வந்தால் சிறப்பு சலுகை அளிக்கப்படும். இந்த பயணத்தில் ரெயில் கட்டணம், ஓட்டலில் தங்குவது, சுற்றுலா இடங்களைப் பார்வையிடுவது ஆகியவை அடங்கும். உணவு வழங்கப்படமாட்டாது. அதுபோல படகு சுற்றுலா, நுழைவுக் கட்டணம் ஆகிய செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.
திருவனந்தபுரம்-கன்னியாகுமரி..
திருவனந்தபுரம்-கன்னியாகுமரி
இரண்டாவது பயணத் திட்டம் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி ஆகும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு நாகர்கோவில் சிறப்பு ரெயிலில் புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு நாகர்கோவில் சென்று அங்கிருந்து திருவனந்தபுரம் மற்றும் கோவளம் கடற்கரையைப் பார்த்துவிட்டு இரவு திருவனந்தபுரத்தில் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள்.
மறுநாள் சனிக்கிழமை காலை திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருக்கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவியில் குளித்துவிட்டு கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம் பார்க்கலாம். பிறகு குமரி அம்மன் கோவில் தரிசனம் முடித்து, கன்னியாகுமரியில் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்த்துவிட்டு, விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அன்று மதியம் 1.30 மணிக்கு நாகர்கோவில் சிறப்பு ரெயிலில் புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பயணிகள் சென்னை வந்து சேர்வார்கள்.
இதற்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.4,200. மூன்று பேராக வந்தால் ரூ.9,900. குழுவாக வருவோருக்கு சிறப்பு சலுகை உண்டு. இந்த கட்டணத்தில் ரெயில் கட்டணம், ஓட்டலில் தங்குவது, சுற்றுலா இடங்களைப் பார்வையிடுவது ஆகியவை அடங்கும். உணவு, நுழைவுக்கட்டணம் போன்ற செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.
ஏற்கனவே அமலில் உள்ள சென்னை-திருப்பதி ரெயில் சுற்றுலாவில் தற்போது காலை சிற்றுண்டியும், மதிய உணவும் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்காக கட்டணத்தில் 100 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படுகிறது என்று கூறினார்.