அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வேகப் படகுப் போக்குவரத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாவினால் கிடைக்கும் அன்னியச் செலாவணியைப் பெருக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
"உலகச் சுற்றுலா வரைபடத்தில் இந்தியாவை முக்கியத்துவப்படுத்திக் காட்டுவதற்கு வேகப் படகுப் போக்குவரத்து உதவும். இதனால் பெருமளவிலான வேலை வாய்ப்புக்கள் உருவாகும்" என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் அலுவலக துணை அமைச்சர் பிரித்விராஜ் சவான் தெரிவித்தார்.
வேகப் படகுச் சுற்றுலா மூலம் மக்களுக்கு இடையிலான தொடர்பை ஊக்குவிக்கவும், அயல்நாடுகளுடன் இந்தியாவிற்கு உள்ள நட்புறவுகள் மேம்படவும் வாய்ப்புக்கள் உருவாகும்.
அன்னியச் செலாவணி வரத்து அதிகரிப்பதன் மூலம், நமது நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் வளர்ச்சி பிரியும்.
தற்போது, வேகப் படகுப் போக்குவரத்து வசதியை ஆண்டிற்கு பத்து மில்லியன் அயல்நாட்டினர் பயன்படுத்துவதன் மூலம் 14 பில்லியன் டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கிறது. இது அடுத்த ஆண்டு இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வேகப் படகுச் சுற்றுலாவில் இந்தியாவின் பங்கு 2 விழுக்காடு மட்டுமே ஆகும். கொச்சின், கோவா உள்ளிட்ட வெகுசில இடங்களில் மட்டுமே வேகப் படகுப் போக்குவரத்து உள்ளது.