சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்தியச் சுற்றுலா அலுவலகத்தை மத்தியச் சுற்றுலா அமைச்சர் அம்பிகா சோனி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் கூடியிருந்த மக்களிடையில் பேசிய அமைச்சர் அம்பிகா சோனி, சுற்றுலாவை புதுமையாகவும் அனைவருக்கும் கட்டுப்படியாகும் வகையிலும் மாற்றுவதற்கு உண்டான வழிமுறைகளை இத்துறையில் உள்ளவர்கள் கண்டறிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய- சீன நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே பெய்ஜிங்கில் இந்தியச் சுற்றுலா அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையிலான நேரடித் தொடர்புகள் அதிகரிக்கும் என்றார்.
அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள், புத்த மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றும், இந்தியா- சீனா இடையில் விமானப் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அம்பிகா சோனி கூறினார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைநகர் டெல்லியில் சீன தேசிய சுற்றுலா அலுவலகத்தை சீன அரசு திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்குச் சுற்றுலா வரும் சீனர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 1981 ஆம் ஆண்டு வெறும் 1371 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2003 ஆம் ஆண்டு 21,152 ஆகவும், 2006 ஆம் ஆண்டு 62,330 ஆகவும் அதிகரித்தது. இது தற்போது தொடர்ந்து வேகமாக அதிகரித்தும் வருகிறது.
இதேபோல, இந்தியாவின் முதல் 15 சுற்றுலாச் சந்தை வரிசையில் சீனாவும் இடம்பெற்றுள்ளது.