ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு விண்ணப்பித்த 3 அல்லது 4 நாட்களில் - எந்த நேர்காணலும் இன்றி - விசா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் இந்தியர்கள் இதுவரை விசாவுக்காக பல நாட்கள் காத்திருந்த நிலை தற்போது மாறப்போகின்றது. இனிமேல் ரஷ்யாவுக்கு செல்ல விரும்பும் இந்திய சுற்றுலா பயணிகள் புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகங்களில் விண்ணப்பித்த 3 அல்லது 4 நாட்களில் விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விசா பெறுவதற்காக இனிமேல் இந்திய சுற்றுலா பயணிகள் நேர்முகவிசாரணை எதற்கும் செல்ல வேண்டியது இல்லை என்று ரஷ்ய தூதரகத்தின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். தற்போது இந்திய சுற்றுலா பயணிகள் விசா பெறுவதற்கு அனைத்து மூலச் சான்றுகளையும் சமர்ப்பித்து வருகின்றனர்.