இந்த உலகில் ஆன்மீகத்திற்கு எவ்வளவு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை அறியாதவர்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை எளிதில் உணர்த்திவிடும்.
இத்துறை அதிக நிதி ஆதாரத்தை கொண்டுள்ளது என்பதை கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து வருகின்றன. நம்பவே தயங்கும் வகையில், 18 பில்லியன் டாலர் பரிமாற்றம் நிகழும் துறையாக ஆன்மீக சுற்றுலா விளங்குகிறது. இதற்கு சிறந்த சான்றாக ஆண்டுக்கு ரூ.474.36 கோடி வருமானம் தரும் ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஸ்ணவி தேவி கோவிலை சொல்லலாம்.
ராஜ்கிரிஹா, புத்தகயா, நாளந்தா, சாரணாத் போன்ற புத்த ஸ்தளங்கள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில், டெல்லியில் உள்ள பாட்னா சாகிப், பங்ளா சாகிப், ஸிஸ்கன்ஜ் குருதுவார்ஸ் ஆகிய சீக்கிய ஸ்தளங்கள் என ஒவ்வொரு மத ரீதியான புனித ஸ்தளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
ஆன்மீக சுற்றுலா செல்வோர் விகிதம்!
ஆண்டுக்கு 30 கோடியிலிருந்து 33 கோடி பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்கின்றனர். ஆன்மீக சுற்றுலா செல்வோர் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டே இருப்பதால் இது ஒரு தனித்துவமிக்க துறையாகவே மாறிவிட்டது.
அண்டை மாநிலமான ஆந்திரத்தில் உள்ள திருப்பதிக்கு மட்டும் ஆண்டுக்கு 18 மில்லியன் பயணிகள் செல்கின்றனர். இதுபோல நாடு முழுவதும் குவிந்துள்ள கோவில்கள், தர்காக்கள், குருதுவார்கள், கிறித்துவ ஆலயங்கள் ஆகியவை உள்நாட்டு சுற்றுலா சந்தையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கின்றன. இத்துறையில் உள்ளதுபோல் பயணிகள் மீண்டும், மீண்டும் செல்லுதல் மற்ற துறைகளுக்கு பொருந்துவதில்லை. எனினும், வைஷ்ணவ தேவி கோவில் போன்று சில ஸ்தளங்களுக்கு குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே புனித பயணம் மேற்கொள்ள முடியும்.
அயல்நாடுவாழ் இந்தியர்களின் பங்கு!
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் அதிகளவில் தென்மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு வருகை புரிகின்றனர். இதில் இரண்டாவது தலைமுறையினர் பங்கு மிக அதிகம். அவர்கள் தனது பூர்வீக நாட்டின் மதத்தையும், கலாச்சாரத்தையும் உணரும் வகையில் கோனார்க், சூரிய
கோவில், திருப்பதி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஜெகநாத் யாத்ரா மேற்கொள்கின்றனர்.
அயல்நாடுகளுக்கான ஆன்மீக சுற்றுலா சந்தை வலிமையாக இருந்தாலும், பலதரப்பட்ட ஆன்மீக ஸ்தளங்களை கொண்டு உலகளவில் இந்தியா சிறந்த நாடாக விளங்குகிறது. பண்பாட்டு கலாச்சார சுற்றுலாவுடன் ஆன்மீக சுற்றுலா மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தை அறிய விரும்புபவர்கள் இதுபோன்ற புனித ஸ்தளங்களுக்கு பயணிக்கின்றனர்.
சாதனைக்கு விடுக்கப்படும் சவால்கள்!
கல்வி, கட்டிடக்கலை ஆகியவற்றிற்காகவும் இந்த பகுதிகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகின்றனர். இவ்வாறு ஆண்டுதோறும் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசும், மாநில அரசும் போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிக அவசியம்.
ஓம்கரெஷ்வர், உஜ்ஜய்ன், அமர்கந்தக், சித்ராகூட், பெட்காட், மகேஸ்வர் ஆகிய பகுதிகளில் ஆன்மீக சுற்றுலாவை வளப்படுத்த மத்திய பிரதேச சுற்றுலா மேம்பாட்டுத்துறை முயற்சித்து வருகிறது. சார் டாம்ஸ் பகுதிக்கு ஹெலிகாப்டர் சேவையை விரிவுபடுத்த உத்தரகாண்ட் அரசும், புத்தமத ஸ்தளங்களை மேம்படுத்த இமாச்சல் அரசும் திட்டமிட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகையில், "கங்கோதரி, பத்ரிநாத் பகுதிகளைப்போல ஷார் டாம்ஸ்க்கு ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சீக்கியர்களின் புனித ஸ்தளமான ஹேம்குந்த் சாகிப் பகுதிக்கும் இச்சேவை அளிக்க விரும்புகிறோம். மேலும் ஹெலிகாப்டர் தளத்திற்கு இலவச குடிநீர், பாதுகாப்பு, மின்சாரம், தீயணைப்பு வசதிகளை இலவசமாக அளிக்கப்படுகிறது" என்றார்.
இந்தியா மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களை கொண்டிருந்தாலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு சாலைப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாமல் உள்ளது. அனைத்திற்கும் மேலாக நியாயமான கட்டணத்தில் தரமான சேவை அளிக்கப்பட வேண்டியது தான் சுற்றுலாத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக உள்ளது. இந்த சவால் உடைபட்டால் உலகளவில் இந்தியாவே சுற்றுலாத்துறையில் முதலிடம் வகிக்கும்.