திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் 3 டன் பூக்களைக் கொண்டு நாளை புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நாளை திருமலைக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் பெருமாளின் ஜென்ம நட்சத்திர தினமான சனிக்கிழமை அன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு புஷ்ப யாகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாளைய தினம் அந்த யாகம் நடைபெறுகிறது.
நாளயை தினம் மாலை கோயில் வளாகத்தில் உள்ள சம்பங்கி மாளிகை திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஸ்தபன திருமஞ்சனமும், விசேஷ சமர்ப்பண பூஜைகளும் மற்றம் புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது.
திருமலையில் நடைபெறும் புஷ்ப யாகத்தினை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு விதமான பூக்கள் திருமலைக்கு வந்துள்ளது. இது சுமார் 3 டன் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்ப யாகத்தைக் காண ஏராளமான பக்தர்கள் நாளைக்கு திருமலைக்கு வருவார்கள். வார இறுதி நாட்கள் என்பதாலும், புஷ்ப யாகம் நடைபெறுவதாலும் நாளை திருமலையே பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.