சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது கற்பக விநாயகர் திருக்கோயில்.
மிகப்பழமையான இத்திருக்கோவில் ஒரு குடவரைக் கோவில் ஆகும். விநாயகருக்கான கோயில்களில் பிள்ளையார்பட்டிக் கோயில் மிகவும் புகழ்பெற்றக் கோயிலாகக் கருதப்படுகிறது.
கோயிலின் மூலவர் கற்பக விநாயகராவார். இவரது துதிக்கை வலம்சுழியாக உள்ளது. கோயின் ஈசன் திருவீசர், அம்பாள் சிவகாமி அம்மை. இந்த கோயிலின் சிறப்பு குடவரைக் கோயிலாகும். கோயிலின் விருட்சம் மருதமர்ம், தீர்த்தம் ஊருணி, கோயில் அமைந்துள்ள ஊர் பிள்ளையார்பட்டி, கோயில் அமைந்துள்ள ஊரின் புராணப் பெயர் மருதம்பூர். தற்போது இது சிவகங்கை மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள வலம்சுழி விநாயகர் மிகவும் விஷேசமானவர். மூலவர் குடவரைக்குள் 6 அடி உயரம் கொண்டு, இரண்டு கைகளுடன் காட்சி அளிக்கிறார். விநாயகரின் வலது கையில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது. இவர் வடக்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார்.
விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், அவர் அர்த்தபத்மாசனத்தில் அமந்திருப்பதும், இடது கரத்தை கடி ஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்புத் தோற்றமாகும்.இந்த கோயிலுக்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது. அதாவது, கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகர், அந்த பாவம் தீர, ஈசனை இத்தலத்தில் பூஜிப்பதாக புராணக் கதைகள் கூறுகின்றன.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் கல்வி, ஞானம் திருமணம், குழந்தைபாக்கியம், குடும்ப நலம் போன்ற சகல பாக்கியங்களும் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த கோயிலுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. 1600 ஆண்டுகளுக்கு முன் குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட பிள்ளையார்பட்டி ஆலயம், ஒன்பது நகரத்தார் ஆலயங்களுள் ஒன்றாகும். மேலும், விநாயகப் பெருமான் ஓங்கார வடிவில் அருள் புரியும் அற்புதத் தலம் இது. இந்த கோயில் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் குடவரைக் கோயில் என்றும் கருதப்படுகிறது.
இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி மிகச் சிறப்பாக பூஜிக்கப்படுகிறது. மேலும், ஆவணி மாதம் 10ஆம் நாள் சதுர்த்தி திருவிழா நடைபெறும். ஒன்பது நாட்களுக்கு முன்பாகவே காப்புகட்டி கொடி ஏற்றம் செய்து திருவிழா தொடங்கும். சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, ஆலய உட்பிரகாரத்தை வலம் வருவார். ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமாள் திருவீதி உலா வருவர். அன்று சிவகாமசுந்தரியின் ஊடலை நீக்க நடராஜர் செய்யும் முயற்சிகள் காண கண்கொள்ளாதவையாக இருக்கும். இதனை ஏராளமான பக்தர்கள் திரளாகக் கண்டு மகிழ்வர்.பிள்ளையார்பட்டிக்குச் செல்ல காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தூரமும், மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரமும், திருப்பத்தூரிலிருந்து 9 கி.மீ. தூரமும் பயணம் செய்ய வேண்டும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு கோயிலைச் சுற்றிலும் விடுதிகள் உள்ளன. சிவகங்கை திருப்பத்தூர் காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.