Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நித்திய கல்யாண பெருமாள் கோயில் சிறப்பு!

Advertiesment
நித்திய கல்யாண பெருமாள் கோயில் சிறப்பு!

Webdunia

பெருமாள், திருக்கல்யாண கோலத்தில், பூதேவியான அகிலவல்லித் தாயாரைத் தமது இடபாகத்தில் ஏந்தி, வராக மூர்த்தியாக சேவை சாதிக்கும் அற்புத நிலையில் திருவிடந்தையில் அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் காட்சி தருகிறார்.

கோயிலின் மூலவராக ஆதிவராகப் பெருமாளும், மூலவர் தாயாராக அகிலவல்லி நாச்சியாரும், உற்சவராக நித்ய கல்யாண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகின்றனர். கல்யாண விமானமும், தலவிருட்சமாக புன்னை மரத்தையும் இக்கோயில் கொண்டுள்ளது.

அமைவிடம் :

108 திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம், சென்னையில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் உள்ளது.

திருவிடந்தை - பெயர் காரணம் :

"திரு"வை (லட்சுமியை) தன் இடப்பக்கத்தில் பெருமாள் கொண்டுள்ளதால் திரு - இட - எந்தை என்பது மருவி திருவிடந்தை என பெயர் பெற்றுள்ளது.

வராக தீர்த்தமும் - கல்யாண தீர்த்தமும் :

வராக தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும் என்பதும் ஆதிவராகப் பெருமாள் பலி என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்காகும்.

ராகு-கேது தோஷ நிவர்த்தி, திருமண பிரார்த்தனை தலம் :

தம்பதி சமேதராய் ஆதிசேஷன், பெருமாள் திருவடியை தாங்க சேவை சாதிப்பதால் இப்பெருமாளை சேவிப்பவர்க்கு ராகு, கேது தோஷங்கள் நீங்குகின்றன.

திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து மாலை அணிந்து வேண்டிக்கொண்டு, ஒன்பது முறை பிரதட்சணம் வந்து வீடு சென்றால் விரைவில் திருமணம் கூடி வருகிறது.

திருஷ்டிப் பொட்டு :

உற்சவர் நித்யகல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டி பொட்டு அமைந்துள்ளது. மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்குகின்றன.

தம்பதி சமேதராக (ஆறரை அடி உயரத்துடன்) ஆதிவராகப் பெருமாள் சேவை சாதிக்கும் திருத்தலம் இது ஒன்றே.

புராண வரலாறு :

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மேகநாதன் என்ற அசுர மன்னனுக்கு பலி என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்த போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும், பலி மறுத்து விட்டதாகவும், மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும், அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும், அவனது தவத்தை மெச்சிய மெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் புராணம் கூறுகிறது.

இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம சுலோகத்தை உபதேசித்ததாக புராணம் கூறுகிறது.

ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம்.

பாடல் சிறப்பு :

திருமங்கை ஆழ்வார் பெருமாளை 10 பாசுரங்களில் பாடி சிறப்பித்துள்ளார்.

அழகிய மணவாளதாசர் நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் 92-வது பாசுரத்தில் "தொண்டானேன் திருவிட வெந்தைக்கே செறிந்து" என பாடியுள்ளார்.

குரவை ராமனுஜதாசர் தனது நூற்றெட்டு திருப்பதி திருப்புகழில் 92-வது பாசுரத்தில் "இடவெந்தை பதிவாழ்மேவிய பெருமாளே" என பாடியுள்ளார்.

கல்வெட்டுத் தகவல்கள் :

1. விஜயராஜேந்திர சோழரின் 35-வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1052) திருவிடவெந்தை ஆதிவராக பெருமாளுக்கு இந்த கிராமமே தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.

2. முதல் ராஜராஜ சோழனின் 19-வது ஆண்டு கல்வெட்டு (கி.பி.1003) பங்குனி ஊத்திரம் ஆதியாக ஒன்பது நாள் திருவிழா நடத்த மூலதனம் வழங்கிய செய்தியை கூறுகிறது.

3. இதே சோழனின் 29-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1013) பங்குனி உத்திர திருநாளில் பிராமண போஜனத்துக்கு வழங்கிய நன்கொடையை கூறுகிறது.

4. ராஜராஜ சோழனின் 17-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1001) அவர் பிறந்த ஆவணி சதயத்தை ஈறாகக் கொண்டு ஏழுநாள் திருவிழா நடத்த கட்டளையிட்டதை கூறுகிறது.

5. ராஜ ராஜ சோழனின் 19-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1003) கும்ப ஞாயிறு முழுமையும் பிராமண போஜனத்துக்கு மூலதனம் அளித்ததை கூறுகிறது.

6. திருமங்கையாழ்வார் பெயரில் கலிச்சிங்கன் மடம் ஒன்று இருந்ததையும், அமாவாசை தோறும் அங்கு பிராமண போஜனம் நடந்ததையும், குலோத்துங்க சோழனின் 45-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1115) கூறுகிறது.

திருவிழாக்களும், பூஜைகளும் :

நித்யபடி நான்கு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி சிறப்புடன் நடைபெறுகிறது.

ஆனிகருடசேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்சம் கருடசேவை, ஸ்ரீஜெயந்தி, உறியடி உற்சவம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், தனுர்மாத பூசை, மாசிமகம் கருடசேவை, பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் ஆகியவை திருக்கோயில் மூலமும் உபயதாரகள் மூலமும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரையும் சந்நிதிகள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil