சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சுற்றுலா தலமான ஏற்காட்டில் வருகிற 28-ந் தேதி கோடை விழா துவ்ங்க உள்ளது. மலர் கண்காட்சி, படகுப் போட்டி களை கட்ட உள்ள இந்த கோடை விழா 30ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இத்தகவலை மாவட்ட வருவாய் அதிகாரி கலையரசி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் மாவட்ட வருவாய் அதிகாரியும், ஆட்சியருமான (பொறுப்பு) கலையரசி பேசினார்.
அப்போது, ஏற்காட்டில் இந்த ஆண்டு கோடை விழா வருகிற 28-ந் தேதி துவங்க உள்ளது. 30-ந் தேதி முடிய தொடர்ந்து 3 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த விழாவை புதுமையான முறையிலும் சிறப்பான முறையிலும் நடத்த தோட்டக்கலை துறையின் மூலம் மலர் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
ஏற்காடு பூங்கா மற்றும் ஏரி ஆகிய பகுதிகளில் மின் அலங்காரம் செய்யவும், சுற்றுலாத் துறையின் மூலம் 28-ந் தேதி சினிமா நடிகர் எஸ்.வி.சேகர் பங்கேற்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி நடிகர் கிங்காங் பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. மேலும் 3 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் படகு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மேலும் சுற்றுலா துறை மூலம் படகு இல்லம், லேடீஸ் சீட், டெலஸ்கோப் கருவி கட்டிடம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் கரடியூர் பகுதிக்கு சென்று வரும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கால்நடைத்துறை மூலம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் கண்காட்சி, கால்நடை கண்காட்சி, கால்நடை மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்பட உள்ளன. அதுதவிர சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தவழும் குழந்தைகள் போட்டி, கோலப்போட்டிகள் நடத்தவும், விளையாட்டு துறை மூலம் சுற்றுலா பயணிகள் மலையேறும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன என்று கலையரசி தெரிவித்தார்.