The Call - இன்னொரு சைக்கோ கில்லர்
, திங்கள், 13 ஜனவரி 2014 (11:21 IST)
ஹாலிவுட் சினிமாக்கள் இரண்டு வகைகளில் முக்கியமானவை. கலாபூர்வமான படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கும், கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கும். கலாபூர்வத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் பூர்வஜென்ம பிரச்சனை என்பதால் அதை அப்படியே ஒதுக்கிவிட்டு கமர்ஷியலுக்கு வருவோம்.
ஹாலிவுட்காரர்களின் தொழில் அட்சர சுத்தம். லட்சம் ஆணடுகளுக்கு முன் இயற்கை பேரழிவால் இல்லாமல் போன டைனோசர்களை உயிர்ப்பிப்பது போல் எழுபது எம்எம்மில் ஃபிலிம் காட்டினாலும், அந்த டைனோசரை ஒரு கொசு கடிச்சது, கடிச்ச உடனே ஒரு மெழுகில் அகப்பட்டது, டைனோசரின் டிஎன்ஏ யுடன் அது இத்தனை வருசமா கெட்டுப் போகாமல் அப்படியே இருந்திச்சி என்று சயன்டிபிகலாக நம்மை முட்டாளாக்கி படத்தை ரசிக்க வைத்து கரன்சியை உருவிக் கொள்வதில் கில்லாடிகள்.
அப்படிதான் தொலைபேசி என்ற சாதனத்தை வைத்து ஐம்பது படங்களாவது எடுத்திருப்பார்கள். போன் பூத், செல்லுலார் போன்றவை அதில் பிரபலமானவை. இன்னும் என்னென்ன வகையில் இந்த தொலைபேசி என்ற வஸ்துவை காசாக்க முடியும் என்று மூளையை கசக்கிய ரிச்சர்ட் டி ஓவிடியோ எழுதி திரைக்கதை அமைத்த படம்தான் தி கால். தொலைக்காட்சி தொடருக்காக எழுதியதை எழுத்துப் பட்டறையில் தட்டி குறுக்கி 94 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக்கினார்கள்.