Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி ரோடு ஹோம் - காதலின் நினைவோடை

Advertiesment
தி ரோடு ஹோம் - காதலின் நினைவோடை
, புதன், 18 பிப்ரவரி 2009 (15:49 IST)
எளிமையான, எதிர்பார்ப்பில்லாத அன்பே காதல் எனில் அதற்கு அழிவு கிடையாது. ஒவ்வொரு ‌ஜீவராசிக்குள்ளும் அந்த காதல் ஒரு தீபத்தைப்போல சுடர்ந்து கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அதன் பிரகாசத்தை கண்டுகொள்ளவும், அதன் ஆத்ம சுத்தியில் கரைந்து போகவும் நம்மால் முடிவதில்லை. சுயநலமும், பேராசையும் கொடுங்காற்றாக தீபத்தை நடுங்கச் செய்கிறது. அதன் தூய்மையை பேண இயலாதவண்ணம் நம் மனங்களோ தன்னலத்தின் சாம்பல் பூத்து கிடக்கின்றன.

காதலின் தூய்மையை ஒருமுறையேனும் நீங்கள் தொட்டு உணர்ந்ததுண்டா? அதன் பிரகாசத்துக்கு கண்கள் கூச தலை குனிந்த சம்பவம்? இல்லையெனில் ஷாங் யுமுவின், தி ரோடு ஹோம் திரைப்படம் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

சீனாவின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்த இளம் பெண்ணின் காதலைச் சொல்கிறது ஷாங் யுமுவின் இந்த திரைப்படம். சீன எழுத்தாளர் பாவோ எழு‌திய Remembrance நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் அறிமுகமான சினிமா அதன் முழு வீச்சை எட்ட ஏறக்குறைய எண்பது வருடங்கள் எடுத்தது. இடையில் ஏற்பட்ட கலாசார புரட்சியும், அதற்குப் பிந்தைய அரசும் கலைகளை முதலாளித்துவத்துக்கான கேளிக்கையாக கருதி அதன் எல்லைகளை பிரசாரம் எனும் வட்டத்திற்குள் சுருக்கியது. சினிமா உள்பட அனைத்து கலைகளும் எவற்றை பிரதிபலிக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டன. சோசலிஸ ஏதார்த்தவாதம் என்ற பெய‌ரில் பிரசாரத்தன்மை கொண்ட படங்கள் மட்டுமே சீன அரசால் அங்கீக‌ரிக்கப்பட்டது.

இந்த மூச்சுத் திணறலிலிருந்து சீன சினிமாவை மீட்ட ஐந்தாம் தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவர் ஷாங் யுமு. இவர் பீகிங் திரைப்படக் கல்லூ‌ரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். அதுவரை சீன சினிமாவில் இருந்துவந்த கட்டுப்பெட்டியான சோசலிஸ ஏதார்த்தவாதத்துக்கு எதிரான தனித்துவமானதொரு கதைகூறு முறையை தனது படங்களில் கையாண்டார் ஷாங் யுமு. இவரது முதல் படம் Red Sorghum. இதுவரை சுமார் 18 திரைப்படங்கள் இயக்கியிருக்கும் இவரது பெரும்பாலான படங்கள் சீனாவின் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியது. சீன மக்களுக்கு கல்வியின் மீதிருந்த ஆர்வமும் ஒவ்வொருவருக்கும் கல்வி எட்டப்பட வேண்டும் என்ற சீன கம்யூனிஸ்டுகளின் குரலும் இவரது படங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரசாரம் விலக்கிய காட்சியமைப்புடன் என்பது குறிப்பிடத்தக்கது.

தி ரோடு ஹோம் படத்தின் கதை நகரத்து இளைஞனொருவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. கிராமத்தில் ஆசி‌ரியராக வாழ்ந்து மறைந்த தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நகரத்திலிருந்து கிராமத்துக்கு வருகிறான் இளைஞன். கிராமத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்டும் பணியில் இருந்த அவனது தந்தை அதற்காக வேறு கிராமத்துக்கு சென்றபோது அங்கேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். அவரது உடலை வாகனத்தில் வைத்து எடுத்து வருவதை கிராமத்தில் இருக்கும் அவனது தாய் தடுத்து விடுகிறாள். சீனாவின் பழைய நம்பிக்கையின்படி, இறந்தவர்களின் உடலை சுமந்தபடி ‘பயப்படாதீர்கள், இது நீங்கள் நடந்த சாலை... உங்கள் வீட்டிற்கு செல்லும் சாலைதான்’ என்று சொல்லிக் கொண்டே வருவார்கள். இதனால் இறந்தவர்களின் ஆன்மா அவர்கள் வாழ்ந்த வீட்டை நினைவு வைத்துக் கொள்ளும் என்பது அவர்கள் நம்பிக்கை.

தாயின் விருப்பத்துக்கு மகன் ஒத்துக் கொள்கிறான். ஊர் மேய‌ரின் உதவியுடன் தந்தையின் உடலை எடுத்துவர ஏற்பாடு செய்கிறான். ஆனால், அதற்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அதிக பணம் தரும் வேலைதேடி நகரங்களுக்கு சென்றுவிட்டார்கள். அதனால் வாடகைக்கு ஆட்கள் அமர்த்தி இறந்தவர் உடலை கிராமத்துக்கு கொண்டு வருகிறார்கள். வரும் வழியில் அவன் தந்தையின் அருமையை தெ‌ரிந்து கொள்பவர்கள் அவர் உடலை சுமந்து வந்ததற்கான பணத்தை வாங்க மறுத்து விடுகிறார்கள்.

தாயின் விருப்பப்படி இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. மகன் நகரத்துக்கு கிளம்பும் மு‌ன், ஒரேயொரு முறை தந்தை பாடம் நடத்திய பள்ளிக் கூடத்தில் பாடம் நடத்தும்படி மகனிடம் தாய் கேட்கிறாள். மகனும் அவள் விருப்பத்தை பூர்த்தி செய்கிறான். அதுவரை கணவனின் கம்பீரக் குரலில் ஈர்க்கப்பட்டு பள்ளிக்கு வந்தவள் அன்று மகனின் குரல் கேட்டு வருகிறாள். தாயும் மகனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். படம் நிறைவடைகிறது.

நிகழ்காலத்தில் நடைபெறும் இந்தக் காட்சிகள் கறுப்பு வெள்ளையில் காட்டப்படுகிறது. கிராமத்துக்கு வரும் இளைஞன் தனது தாய், தந்தையின் இளமைப்பருவ காதலை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறான். இவை மனதை மயக்கும் வண்ணத்தில் காட்டப்படுகிறது. இந்த அப்பழுக்கற்ற காதலே படத்தின் ஆதாரப்பகுதி.

முதன்முதலாக கிராமத்துக்கு வரும் பள்ளி ஆசி‌ரியர் மீது பதினெட்டு வயது ஷாங் ஸியிக்கு காதல் வருகிறது. அவருக்கும் அவள்மீது காதல். ஆசி‌ரியர் கிராமத்து ஆண்களின் துணையுடன் பள்ளிக்கூடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார். இந்தப் பணியில் பங்குபெற பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் வேலை செய்யும் ஆண்களுக்கு வீட்டில் உணவு தயா‌ரித்து எடுத்து வருகிறார்கள். ஆசி‌ரியருக்காக பிரத்யேகமாக உணவு தயா‌ரிக்கிறாள் ஷாங் ஸியி. அவள் தயா‌ரித்து வரும் உணவை ஆசி‌ரியர் சாப்பிடுகிறாரா என்று தெ‌ரியாத நிலையில், அவர் எந்த உணவை எடுத்துக் கொண்டார் என்று அங்கு பணிபு‌ரிபவனிடம் கேட்கிறாள். அவர்கள் வைக்கும் உணவில் முதலாவதாக இருப்பதை அவருக்கு கொடுப்பதாக சொல்கிறான் அவன். மறுநாள் முதல் உணவு வ‌ரிசையில் ஷாங் ஸியி கொண்டுவரும் உணவு முதலிடத்தை பிடிக்கிறது.

ஷாங் ஸியின் கண் தெ‌ரியாத தாய் மகளின் காதல் கைகூடாமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவளது ஆர்வத்தை கட்டுப்படுத்த முயல்கிறாள். ஆனால், ஆசி‌ரியருக்காக மணிக்கணக்கில் சாலையில் காத்திருக்கிறாள் ஷாங் ஸியி. சிறிய பார்வை ப‌ரிமாற்றங்கள், சின்னப் புன்னகை, ஒருவ‌ரி‌ நல விசா‌ரிப்புகளில் அவர்கள் காதல் பி‌ரிக்க இயலாத அளவுக்கு வளர்கிறது. நாடகத்தன்மை ஏதுமற்ற இந்த கிராமத்து காதலில் பார்வையாளர்களை கரைய விடுகிறார் ஷாங் யுமு.

ஷாங் ஸியின் உலகம் முழுக்க ஆசி‌ரியரே நிரம்பியிருக்கிறார். அவர் பள்ளியில் கட்ட சிவப்பு நிற அதிர்ஷ்ட பேனர் ஒன்றை தானே நெய்கிறாள் (கணவன் இறந்த பிறகு தளர்ந்த நிலையிலும் இறுதிச் சடங்குக்கான துணியை அதே தறியில் நெய்கிறாள் ஷாங் ஸியி).

ஆசி‌ரிய‌ரின் விருப்பத்துக்காக ஒருமுறை மஷ்ரூம் சமைக்கிறாள் ஷாங் ஸியி. ஆனால், அவரால் அதை சாப்பிட முடியாமல் போகிறது. அரசாங்கத்தின் அழைப்பின் பே‌ரில் அவர் உடனே நகரத்துக்கு போயாக வேண்டும். தான் கண்டிப்பாக திரும்பி வருவதாகக்கூறி புறப்படுகிறவர் சொன்ன தேதியில் திரும்பவில்லை. அவருடைய வருகைக்காக காத்திருப்பவள், கடும் பனிப்புயலில் அவரைத் தேடி நகரத்துக்கு கிளம்புகிறாள். பாதி வழியில் புயலின் கடுமையால் சாலையில் மயங்கி விழுபவளை வழிப்போக்கர்கள் வீட்டில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். தகவல் தெ‌ரிந்து கிராமத்துக்கு வருகிறான் காதலன். அதனால் மீண்டும் இரண்டு வருடங்கள் அவனுக்கு தடை விதிக்கிறது அரசாங்கம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பிவரும் அவன் இறுதிவரை அவளை பி‌ரியவே இல்லை.

எளிமையான காதலை இயல்பான காட்சிகளின் வழியாக என்றும் மறக்க முடியாத காவியமாக மாற்றியிருக்கிறார் ஷாங் யுமு. அப்பழுக்கற்ற அன்பினால் நிறைந்த காதல் எப்படியிருக்கும் என்பதற்கு இளம் பெண்ணாக வரும் ஷாங் ஸியின் முகமே உதாரணம். களங்கமற்ற தனது முகத்தில் காதலை அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியும் வார்த்தைகளில் விவ‌ரிக்க முடியாதவை. அதிலும், ஆசி‌ரியருக்காக மணிக்கணக்கில் சாலையில் காத்திருக்கும் ஷாங் ஸியி, அவரை கடந்து செல்லும்போது அவர் ப‌ரிவுடன் நலம் விசா‌ரித்ததும் அந்த பரவசத்தில் குழைவுடன் தனது நடையை மாற்றிக் கொள்வது... காதல்கொண்ட இளம்பெண்ணின் ஒட்டு மொத்த உலகை உணர்த்தி விடுகிறது.

ஷாங் ஸியின் மயக்கும் அழகும், அவரது குழைவான உடல் மொழியும், பரவசம் காட்டும் விழிகளும் அவரது கதாபாத்திரத்தை அதன் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. சீன கிராமத்தின் எழிலை யாங் ஹீயின் கேமரா படம் பிடித்திருக்கும் விதம், படத்தின் காட்சிகளுக்கேற்ப இயைந்துவரும் சீன பாரம்ப‌ரிய இசை, இயல்பாக கதையுடன் தங்களை பொருத்திக் கொள்ளும் கதாபாத்திரங்கள் என கலையின் உன்னதத்தை தொட்டிருக்கிறார் ஷாங் யுமு.

படத்தின் இறுதியில், தந்தை நாற்பது வருடங்கள் கல்வி போதித்த இடத்தில் நின்று மகன் பாடம் கற்பிக்கிறான். அவன் கையில் வைத்திருக்கும் புத்தகம் அவனது தந்தையினுடையது. நாற்பது வருடங்களுக்கு முன் முதன்முதலாக அந்த கிராமத்து குழந்தைகளுக்கு அவர் போதித்தது. Learn Mathematics…Learn the Present…Learn the Past… Keep a Journal…

அர்த்தம் செறிந்த வ‌ரிகளால் நிரம்பிய அந்தப் புத்தகம் அவரே எழுதியது.

Share this Story:

Follow Webdunia tamil