ரவீந்திரன் மாஸ்டர் - காற்றினிலே வரும் கீதம்
, திங்கள், 3 மார்ச் 2014 (16:24 IST)
இசையுலகம் ஒரு மேதையை இழந்து இன்று ஒன்பது வருடங்கள் ஆகிறது. 2005ல் இதே தினம் சென்னையில் மாரடைப்பால் ரவீந்திரன் மாஸ்டர் உயிரிழந்தார். தமிழ்ப்பட ரசிகர்களுக்கு ரவீந்திரன் மாஸ்டர் குறித்து அதிகம் தெரிய வாய்ப்பில்லை. தமிழில் சில படங்களுக்கே அவர் இசையமைத்துள்ளார். தமிழில் அவரின் முதல் படம் ரசிகன் ஒரு ரசிகை.
ரசிகன் ஒரு ரசிகையில் இடம்பெற்ற பாடல்களை கேட்கும் பலரும் அதற்கு இசையமைத்தவர் இளையராஜா என்று தவறாக நினைப்பதுண்டு. கதையின், கதாபாத்திரத்தின் மனோநிலையை பாடலின் வழியாக வெளிப்படுத்தும் மகத்தான திறமையை இளையராஜாவைப் போலவே கைவரப்பெற்றவர் ரவீந்திரன் மாஸ்டர். சிபி மலையில் இயக்கிய ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா மலையாள சினிமாவில் இசை சார்ந்த முக்கிய படங்களில் ஒன்று. மோகன்லாலுக்கும் இசை மேதை ஒருவருக்கும் போட்டிப் பாடல் ஒன்று படத்தில் வரும். கதைப்படி ஒருவரை கொலை செய்ய மும்பையிலிருந்து கேரளாவுக்கு மோகன்லால் வந்திருந்தாலும் அடிப்படையில் அவர் சாது. எதிராளியான இசை விற்பன்னர் இசையே நான் என்ற அகங்காரம் கொண்டவர். தேவசபாதலம் என்று தொடங்கும் அந்தப் போட்டிப் பாடலில் இருவரின் குணங்களுக்கேற்ப ராகம் அமைத்திருப்பார் ரவீந்திரன் மாஸ்டர். ஏறக்குறைய ஒன்பது நிமிடங்கள் நீளமுள்ள அந்தப் பாடல் அவரின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.
பரதன் இயக்கிய காதோடு காதோரம் படம் கிறிஸ்தவ பின்னணி கொண்டது. அதில் வரும் பாடல்களின் டியூனை ஹம் செய்யும் போதே அது நமக்குள் கிறிஸ்தவ பின்னணியை தோற்றுவிக்கும். காட்சி, கதாபாத்திரம் இவற்றை தனது இசையில் வெளிப்படுத்துவதற்கு ரவீந்திரன் மாஸ்டர் முக்கியத்துவம் தந்திருந்தார்.