பியூனா விஸ்டா சோஷியல் கிளப் - ஜனங்களின் இசை
, சனி, 8 பிப்ரவரி 2014 (14:10 IST)
பியூனா விஸ்டா சோஷியல் கிளப் ஆவணப்படத்தை பார்த்தவர்களால் அதனை மறக்க முடியாது. இசையைப் பற்றிய அரிச்சுவடி தெரியாதவர்களையும் இந்த ஆவணப்படம் பரவசப்படுத்தும். இந்த படத்தைக் குறித்து எழுத்தாளர் ஞாநி தனது இணையத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சினிமாவை 1999 கடைசியிலோ 2000 ஆரம்பத்திலோ பார்த்தேன். அதில் இருக்கும் இசை என்னை மிகவும் கவர்ந்தது. அதன்பின் பத்துப் பதினான்கு வருடங்களாக அந்த இசையைத் தேடி கொண்டிருக்கிறேன். எந்த மியூசிக் ஸ்டோருக்குப் போனாலும் அந்தப் படத்தின் டிவிடியோ இசை ஆல்பமோ இருக்கிறதா என்று தேடுவேன். அமெரிக்காவில் ஐரோப்பாவில் கூட தேடினேன். எங்கேயும் எனக்கு அது தட்டுப்படவில்லை.நேற்று இரவு என் ஐமேக்கில் எனக்குத் தெரியாமல் சில நண்பர்கள் போட்டுவைத்திருக்கும் ஃபைல்களை எல்லாம் குப்பைக்கூடைக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது நண்பர் கரு.அண்ணாமலை போட்டு வைத்திருந்த சினிமாக்கள் தொகுப்பைப் பார்த்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட உலக சினிமா இயக்குநர் வாரியாகப் போட்டிருந்தார். அதில் தற்செயலாக விம் வெண்டர்சின் படங்கள் என்ன என்று பார்த்தால் முதலில் இருந்தது பியூனா விஸ்டா சோஷியல் க்ளப். அப்போது இரவு 11.30 மணி. ஆனால் உடனே அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலில் உட்கார்ந்தேன். ஒண்ணே முக்கால் மணி நேரப் படம். 15 வருடங்கள் முன்னால் பார்த்தபோது கிடைத்த அதே மகிழ்ச்சி இப்போதும் கிடைத்தது. ஞாநியின் குறிப்பில் தென்படும் பரவசம் இந்த ஆவணப்படத்தைப் பார்த்த அனைவரையும் தொற்றிக் கொள்ளக் கூடியது. பியூனா விஸ்டா சோஷியல் கிளப் என்பது 1940 களில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இயங்கிய ஒரு கிளப். நடனமும், இசையுமே இதன் பிரதானம். இந்த கிளப்பில் உறுப்பினர்களாக இருந்த கலைஞர்கள் அனைவருமே அன்றாடம் காய்ச்சிகள்.
எழுபது வயதுக்குப் பிறகு தனியாக பல இசை ஆல்பங்களை வெளியிட்ட இந்த கிளப்பின் பாடகர் ஃபெர்ரர் நாற்பதுகளில் ஷு பாலிஷ் செய்யும் வேலையை செய்து வந்தார். இவரைப் போலதான் மற்றவர்களும். வறுமையிலும் இவர்களை ஒன்று சேர்த்தது இசை.