1939
ஆம் ஆண்டு ஃப்ராங்க் காப்ரா (Frank Capra) இயக்கிய கறுப்பு வெள்ளை படம், மிஸ்டர் ஸ்மித் கோஸ் டூ வாஷிங்டன். 11 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் ஒரிஜினல் ஸ்டோரி என்ற ஒரேயொரு பிரிவில் மட்டுமே விருது வென்றது. அமெரிக்க சினிமா சரித்திரத்தில் அரசியல் அரங்கை அதிர வைத்த திரைப்படங்களில் ஒன்றாக இந்தப் படத்தை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆக்சன், அட்வென்சர் படங்கள் வேண்டாம், கதைப்படங்கள் என்ற பெயரிலான சீரியஸ் திரைப்படங்களும் வேண்டாம். மனதுக்கு இதமான மெலோ ட்ராமாக்களே என்னுடைய சாய்ஸ் என்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவர் இயக்குனர் ஃப்ராங்க் காப்ரா. அன்பும் நீதியும் உண்மையும் ஒருபோதும் தோற்பதில்லை என்ற பைபிளின் சாராம்சம்தான் கோப்ராவின் திரைப்படங்கள். நேர்மையின் பிரகாசத்தில் நீதிக்காக போராடுகிறவன்தான் மிஸ்டர் ஸ்மித் கோஸ் டூ வாஷிங்டன் படத்தின் நாயகனும்.அமெரிக்க மாநிலம் ஒன்றின் செனட்டர் திடீரென இறந்துவிடுகிறார். அவருக்குப் பதில் புதியதொரு செனட்டரை அம்மாநில கவர்னர் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அரசியலை தனது அதிகாரத்துக்குள் வைத்திருக்கும் ஜிம் டெய்லர் எனும் பெரு முதலாளி - இவர் பத்திரிகை அதிபரும் ஆவார் - தனக்கு இசைவான ஒருவரின் பெயரை முன் மொழிகிறார். ஆனால் அந்த நபரின் மீதுள்ள அதிருப்தி காரணமாக பெருவாரியான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கவர்னர் யாரை செனட்டராக்குவது என குழப்பமடைகிறார். ஜிம் டெய்லருக்கு இசைவானவராகவும் இருக்க வேண்டும், தனது கவர்னர் பதவிக்கு இழுக்கு நேராத அளவுக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.வீட்டிற்கு உணவருந்த வரும் கவர்னரிடம் அவரது குழந்தைகள் பாய்ஸ் ரேஞ்சர்சின் தலைவர் (Head of Boy Rangers) ஜெஃபர்சன் ஸ்மித்தின் பெயரை பரிந்துரைக்கிறார்கள். முதலில் கோபமாகும் கவர்னர் ஸ்மித்தைப் பற்றிய பத்திரிகை செய்தியைப் பார்த்து அவரை புதிய செனட்டராக அறிவிக்கிறார்.இந்த தன்னிச்சையான முடிவு ஜிம் டெய்லருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அவரை சமாதானப்படுத்துகிறார் சீனியர் செனட்டரான ஜோசப் ஹாரிசன் பெயின். இவர் ஸ்மித்தின் தந்தையுடன் ஒருகாலத்தில் நீதிக்காக போராடியவர். ஆனால் கடந்த இருபது வருடங்களாக ஜிம் டெய்லரின் அதிகாரத்திற்குட்பட்டு தனது அரசியல் தகுதியை மேம்படுத்திக் கொண்டவர்.புதிய செனட்டர் ஸ்மித் வாஷிங்டன் வருகிறார். அவரது வெகுளித்தனம் முதல் நாளே பத்திரிகைகளின் கேளிக்கைக்கு விருந்தாகிறது. செய்தியை திரித்துப் போட்ட பத்திரிகையாளர்களை தாக்குகிறார் ஸ்மித். அவரை சூழ்ந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள் அவரை ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என கேலி செய்கிறார்கள். ஸ்மித்தை இது காயப்படுத்துகிறது.ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கும் ஸ்மித்தை பெயின் சமாதானப்படுத்துவதுடன், ஸ்மித்தின் கனவான தேசிய பாய்ஸ் ரேஞ்சர்ஸ் கேம்ப்பை உருவாக்க பில் (Bill) ஒன்றை தயாரிக்கும்படி கேட்டுக் கொள்கிறார். இதற்கு ஸ்மித்தின் காரியதரிசி கிளரிஸா சாண்டர்ஸ் (Clarissa Saunders) உதவி செய்கிறார்.செனட் சபையில் தனது தேசிய கேம்ப் பற்றி குறிப்பிடும் ஸ்மித், தனது மாநிலத்தில் வில்லட் கிரீக் என்ற இடத்தை அதற்காக தேர்வு செய்திருப்பதாக குறிப்பிடுகிறார். நிலம் வாங்குவதற்கான பணத்தை நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடமிருந்தே வசூலிக்க முடியும் அரசாங்கம் தர வேண்டியதில்லை என்றும் கூறுகிறார் ஸ்மித். அன்றே மாணவர்கள் அவருக்கு பணம் அனுப்ப தொடங்குகிறார்கள்.
ஸ்மித்தின் இந்த பேச்சு பெயின் உள்ளிட்ட ஜிம் டெய்லரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அதே வில்லட் கிரீக் பகுதியில் அணை கட்ட பில் ஒன்றை தயாரித்து சபையின் ஒப்புதலுக்காக அவர்கள் ஏற்கனவே அனுப்பியிருக்கிறார்கள். இந்த அணை திட்டம் முழுக்க முழுக்க ஜிம் டெய்லரின் நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்த விவரங்கள் ஸ்மித்துக்கு தெரிய வருகிறது. ஜிம் டெய்லருக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி பெயின் கூறும் அறிவுரையை ஸ்மித் ஏற்க மறுக்கிறார். அடுத்தநாள் செனட் கூடுகிறது. ஸ்மித் தனது சொந்த நலனுக்காக தேசிய பாய்ஸ் கேம்பை வில்லட் கிரீக்கில் அமைக்க முனைவதாக குற்றம்சாற்றுகிறார் பெயின். ஸமித் செனட்டரான பிறகு வில்லட் கிரீக்கில் நிலம் வாங்கியதாகவும், அந்த நிலத்தில்தான் கேம்ப் அமைக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகவே நாடு முழுவதிலுமிருந்து அவர் நிதி திரட்டுவதாகவும் ஜிம் டெய்லர் போலியாக தயாரித்த ஆவணத்தை முன் வைத்து வாதிடுகிறார் பெயின். இதனைத் தொடர்ந்து ஸ்மித்திடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த அநியாயத்தை சகித்துக் கொள்ள முடியாத ஸ்மித் தனது சொந்த ஊருக்குத் கிளம்புகிறார். அவரை தடுத்து நிறுத்துகிறாள் சாண்டர்ஸ். நீதிக்காக போராடும்படி அவரை வற்புறுத்துகிறவள், அதற்கான வழிமுறையையும் சொல்லித் தருகிறாள்.
மறுநாள் செனட்டுக்கு வருகிறார் ஸ்மித். வில்லட் கிரீக் அணை ஜிம் டெய்லரின் நலனுக்காக உருவாக்கப்பட்டது என்றும், ஜிம் டெய்லர் போன்றவர்கள் அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் வாதிடுகிறார் ஸ்மித். ஆனால் அவரது பேச்சை மற்ற செனட்டர்கள் செவிமடுக்க மறுக்கின்றனர்.இந்நிலையில் செனட் சபையின் விதிமுறையை பயன்படுத்தி மொத்த செனட்டையும் முடக்குகிறார் ஸ்மித். இந்த செயல் நாடு முழுவதும் விவாதப் பொருளாகிறது. ஜிம் டெய்லர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஸ்மித்துக்கு எதிரான கருத்துகளை ஊடகங்கள் வழியாக பரப்புகிறார். அதனை முடக்க துணியும் பாய்ஸ் ரேஞ்சர்ஸ் சிறுவர்கள் தாக்கப்படுகிறார்கள். 24 மணி நேரத்துக்கு மேல் நீளும் ஸ்மித்தின் நீதிக்கான போராட்டம் அவருக்கு வெற்றியை தருகிறதா என்பதுடன் படம் நிறைவடைகிறது.படத்தின் கதையை படிக்கும் போதே இப்படம் அமெரிக்க அரசியலில் குறிப்பாக செனட்டர்களின் மத்தியில் எப்படிப்பட்ட எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கும் என்று ஒருவரால் யூகித்துக் கொள்ள முடியும். படத்தின் ப்ரிமியர் ஷோவில் கலந்து கொண்ட பல செனட்டர்கள் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறுகின்றனர். இதுவொரு மோசமான முட்டாள்தனமான படைப்பு என்பது பெரும்பாலான அமெரிக்க அரசியல்வாதிகளின் தீர்ப்பாயிருந்தது. மேலும், ஐரோப்பாவில் படத்தை வெளியிட்டால் அமெரிக்காவின் மதிப்பு அங்கு கேள்விக்குள்ளாகும், ஆகவே படத்தை ஐரோப்பாவில் வெளியிட வேண்டாம் என ஃப்ராங்க் காப்ராவையும், படத் தயாரிப்பு நிறுவனமான கொலம்பியா பிக்சர்ஸையும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்த எதிர்மறை விமர்சனங்கள் ஆஸ்கர் விருதிலும் எதிரொலித்தது ஆச்சரியம் இல்லைதான்.
நீங்கள் ஒரு திரைப்பட ரசிகராக இருந்தால் மேலே உள்ள அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஃப்ராங்க் காப்ராவின் இந்தப் படத்தை முழுமையாக ரசிக்க முடியும். ஃப்ராங்க் காப்ராவின் பெரும்பாலான படங்களில் வரும் நாயகனைப் போலவே வெகுளியும், நேர்மையும் கொண்ட ஜெஃபர்சன் ஸ்மித் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தவர் ஜேம்ஸ் ஸ்டூவர்ட். வாஷிங்டன் வந்தவுடன் ஒரு கிராமத்தவனுக்கு உரிய பரபரப்புடன் அவர் அமெரிக்காவின் சரித்திரப் புகழ்மிக்க இடங்களுக்கு செல்வது படத்தின் பிற்பகுதியில் தேசப்பற்றுடன் ஜிம் டெய்லருக்கு எதிராக வாதிடும் போது பெரிதும் உதவுகிறது. குறிப்பாக ஆப்ரஹாம் லிங்கனின் நினைவிடத்தில் அவர் கொள்ளும் மனவெழுச்சி.
பெயினின் மகளான சூஸனை முதல் முறை சந்திக்கும் போதே சூஸனின் அழகில் தடுமாறிப் போகிறார் ஸ்மித். இதனை காப்ரா படமாக்கியிருக்கும் விதம் சிறப்பானது. சூஸனுடன் ஸ்மித் பேசும் போதெல்லாம் பதற்றமடைந்த அவரது கைகள் தொப்பியை தவறவிட்டுக் கொண்டேயிருக்கின்றன.
படத்தின் நாயகன் ஸ்டூவர்ட் என்றாலும் பட விளம்பரங்களில் அவரது காரியதரிசி கிளரிஸா சாண்டர்ஸின் கதாபாத்திரத்தில் நடித்த ழான் ஆர்தருக்கே முதலிடத்தை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் ஆகச் சிறந்த கதாபாத்திரமும் இவருடையதுதான்.
சாண்டர்ஸுக்கு அவள் பார்க்கும் வேலையில் திருப்தியில்லை. வேலையை விட்டுவிடுவதாக தனது பத்திரிகை நண்பர் டிஷ்ஷிடம் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கிறாள். ஸ்மித்தின் வருகை அவளுக்கு மேலும் எரிச்சலை தருகிறது. பாய்ஸ் கேம்பிற்கான பில்லை உடனடியாக தயாரிக்க வேண்டும் என்று ஸ்மித் கூறும் போது அவரது வெகுளித்தனத்தை ரசித்தபடியே அது அத்தனை எளிதான விஷயமில்லை என்று விளக்குகிறாள். மேலும், ஸ்மித் கூறும் வில்லட் கிரிக்கில் ஜிம் டெய்லரின் திட்டப்படி அணை கட்டவிருப்பதும் அவளுக்குத் தெரியும். அதனைத் தெரிந்து கொண்டே செனட்டில் அது குறித்து பேசும்படி அவனைத் தூண்டுகிறாள். அந்த பேச்சு பெயின் உள்ளிட்ட ஜிம் டெய்லரின் ஆதரவாளர்களை பதற்றமடைய வைப்பதை தனது பத்திரிகை நண்பனுடன் சேர்ந்து செனட் சபையின் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து ரசிக்கவும் செய்கிறாள்.சூஸனிடம் ஸ்மித் கொள்ளும் ஆர்வம் சாண்டர்ஸிடம் நுட்பமான பொறாமையை ஏற்படுத்துகிறது. ஒருமுறை ஸ்மித் செனட் சபைக்கு வராமலிருக்கும் பொருட்டு சூஸனை அவனுடன் வெளியே அனுப்புகிறாள் சாண்டர்ஸ். பெயினின் திட்டப்படி இது நடந்தேறுகிறது. பிறகு டிஷ்ஷுடன் மது அருந்துகிறாள். முதல் முறை தனது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் தாயின் மனநிலையில் தான் இருப்பதாக போதையில் கூறுகிறாள் சாண்டர்ஸ். பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறாள் டிஷ்ஷிடம். பெண்ணின் மன உலகு நகைச்சுவை மிளிர காட்சியாக்கப்படுகிறது.ஸ்மித் தனது தந்தையை பற்றி ஒருமுறை சாண்டர்ஸிடம் கூறுகிறார். இயற்கையை குறித்த வியப்பாக அமைகிறது அந்தப் பேச்சு. மரம், செடி, கொடி, நட்சத்திரம் என எல்லாவற்றிலும் இயற்கையின் அதிசயம் நிரம்பியிருக்கிறது. ஒருபோதும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் அதிசயத்தை தவறவிடக் கூடாது. நீண்ட இருண்ட குகைக்கு வெளியே காலை வெளிச்சம் பரவும் அற்புதத்தை நீ கவனித்திருக்கிறாயா?
ஸ்மித்தின் பேச்சை ஆச்சரியமாக கேட்கும் சாண்டர்ஸ் சொல்கிறாள், நான் இதுவரை குகையில்தான் இருந்திருக்கிறேன்.
வாழ்வைப் பற்றி பேசும் மேதைகள் அனைவரும் இறுதியில் வந்து சேரும் இடமாக இயற்கையே இருக்கிறது. அப்பாஸ் கியராஸ்தமியின் படங்களில் இயற்கை குறித்த வியப்பை காண முடியும். இவர்கள் குறிப்பிடும் இயற்கை எனும் பதம் வெறும் மரத்தையும், மண்ணையும் மட்டுமல்ல, மனித குலத்தின் அடிப்படை உரிமையான சுதந்திரம், நேர்மை, மனிதாபிமானம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. அதனால்தான் இந்த உரையாடலுக்குப் பிறகு ஸ்மித்தை வெகுளி என்பதற்கு மேலாக பார்க்கத் தொடங்குகிறாள் சாண்டர்ஸ்.
சாண்டர்ஸின் முழுப் பெயர் கிளரிஸா சாண்டர்ஸ். கிளரிஸா அத்தனை அழகான பெயரல்ல. அதனால் அவளை அனைவரும் சாண்டர்ஸ் என்றே அழைக்கிறார்கள். அவளது முதல் பெயரான கிளரிஸாவை கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஸ்மித், அதற்குப் பிறகும் சாண்டர்ஸ் என்றே அழைக்கிறார்.
ஸ்மித்தின் நீதிக்கான போராட்டத்துக்கு பெரும் உதவியாக இருக்கிறாள் சாண்டர்ஸ். இப்போது ஸ்மித் அவளை கிளரிஸா என்று அழைக்கிறார். இது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. நீங்கள் நீதியின் பக்கம் நிற்கும் போது நீங்கள் மட்டுமின்றி உங்களைச் சார்ந்த அனைத்தும் அழகாகிவிடுகிறது.
படத்திற்கு Dimitri Tiomkin இசையமைத்துள்ளார். காப்ராவின் இட்ஸ் ஏ வொண்டர்ஃபுல் லைஃப், ஹிட்ச்காக்கின் ஐ கன்ஃபெஸ் மற்றும் தி கன்ஸ் ஆஃப் நவரோன் போன்ற முக்கியமான திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். படத்தில் எந்தக் காட்சியிலும் இசை துருத்திக் கொண்டு தெரிவதில்லை. ஒரு காட்சியில் ஸ்மித் ஊருக்கு செல்லும் முடிவுடன் ஆப்ரஹாம் லிங்கனின் நினைவிடத்துக்கு வருகிறார். அவரைத் தேடி அங்கு வருகிறாள் சாண்டர்ஸ். ஊருக்கு போகும் திட்டத்தை கைவிட்டு தேசத்தின் நன்மைக்காக போராடும்படி ஸ்மித்தை கேட்டுக் கொள்கிறாள். படத்தின் முக்கியமான இந்தக் காட்சியில் பின்னணி இசையே இல்லை.படத்தில் நாடகத்தனமான காட்சிகளும் உண்டு. குறிப்பாக ஜிம் டெய்லரின் ஊடக அவதூறுக்கு பதிலடியாக சிறுவர்கள் ஸ்மித்தின் பாய்ஸ் ஸ்டஃப் பத்திரிகையை விநியோகிப்பதும், டெய்லரின் ஆட்கள் அவர்களைத் தாக்குவதும். அமெரிக்கா போன்ற பரந்துபட்ட தேசத்தில் சிறுவர்களின் இந்த நடவடிக்கை பெரும் கிளர்ச்சி போல் தெரிவதற்கான சாத்தியங்கள் குறைவு.
காப்ராவின் மிஸ்டர் ஸமித் கோஸ் டூ வாஷிங்டன்னை சராசரியான தேசபக்தி படம் என வரையறுக்க முடியாது. நமது அரசியல்வாதிகளும் பெரு முதலாளிகளும் வலியுறுத்தும் தேசபக்தியிலிருந்து இது முற்றிலும் வேறானது. ஜிம் டெய்லர் போன்ற அதிகார மையங்களின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்கம் முற்றிலுமாக விடுபட வேண்டும், தனி மனிதர்களின் சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது. மக்களால் மக்களுக்கான அரசாங்கம் என்பதை சற்று உரத்த குரலிலேயே பதிவு செய்திருக்கிறார் காப்ரா. ஆனாலும் கலை அமைதி பெருமளவு சேதாரமாகவில்லை என்பதே இதன் சிறப்பு.