உலகமே ஐஸ்வர்யா ராயை கொண்டாடியபோது ஒருவர் மட்டும் அவரை நிராகரித்தார். ஐஸ்வர்யா ராய் ரொம்ப சாதாரணமான பெண், சுமாரான நடிகை என்றார். அழகை கொண்டாட தெரியாதவர் அல்ல அவர். ஊர்மிளா, இஷா கோபிகர், நிஷா கோத்தாரி என அரை டஜன் நடிகைகளின் அழகை, திறமையை வெளிக்கொண்டு வந்த ராம்கோபால் வர்மாதான் அவர்.
இன்று வர்மாவின் ரசனையில் தலைகீழ் மாற்றம். ஐஸ்வர்யா ராயின் பரம ரசிகன் நான் என்கிறார். எப்படி இந்த திடீர் மாற்றம்?
பிரான்ஸ் போர்டு கப்போலோ இயக்கத்தில் மார்லன் பிராண்டோ, அல்பசினோ நடித்த காட்பாதர் படத்தை தழுவி சர்க்கார் படத்தை எடுத்தார் வர்மா. அமிதாப்பச்சன் பிராண்டோவின் வேடத்திலும் அபிஷேக்பச்சன் அல்பசினோ கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். படம் சூப்பர் ஹிட்.
சர்க்காரின் இரண்டாம் பாகத்தை சர்க்கார் ராஜ் என்ற பெயரில் எடுத்து வருகிறார் வர்மா. இதில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சனுடன் ஐஸ்வர்யா ராயும் நடித்து வருகிறார்.
படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த காட்சியொன்று ஒன்பது டேக் வரை போயிருக்கிறது. சில தொழில் நுட்ப பிரச்சனைகள். ஒன்பது டேக்கிலும் முதல்பட நடிகைபோல் ஈடுபாட்டுடன் பிசிறடிக்காமல் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராய் சிறந்த நடிகை, என்னை அவங்க ஆச்சரியப்படுத்திட்டாங்க. நான் அவங்க ரசிகனாயிட்டேன் என்று உருகுகிறார், ரஃப் அண்ட் டஃப் படங்களை எடுக்கும் வர்மா.