கோலாகலமாகத் துவங்கி அதே கோலாகலத்துடன் முடிந்துள்ளது கேன்ஸ் திரைப்பட விழா.
மடோனா, ஷரோன் ஸ்டோன், பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி, பெலைப் குரூஸ், மோனிகா பெலூசி, ஜாக்கிசான், ஹாரிசன் போர்டு, ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், பெட்ரோ அல்மதோவர் இவர்களுடன் ஐஸ்வர்யா ராய் என எங்கெங்கு நோக்கினும் வி.ஐ.பிக்கள்.
மாரடோனா, மைக் டைசனின் வரவு எதிர்பாராதது. சிவப்புக் கம்பள வரவேற்பில் இந்த செலிபிரிட்டிகள், குறிப்பாக நடிகைகள் செய்த முக சேஷ்டைகளை வைத்து புத்தகமே எழுதலாம்.
வி.ஐ.பி.க்களின் காஸ்ட்யூம், மேக்கப்புகளுக்கு நடுவில் கேன்ஸின் நோக்கமே சில வருடங்களாக சிதறுண்டு போகிறது. இந்த முறை சிறந்த படத்திற்கான palmed'or பரிசு பெற்ற திரைப்படம் யாருக்கும் தெரிந்திருக்காது. அந்தச் செய்தியை செலிபிரிட்டிகள் மறைத்து விட்டதே காரணம்.
பிரெஞ்ச் திரைப்படமான Entre Les Murs (ஆங்கிலத்தில் The Class) சிறந்த படத்திற்கான palmed'or பரிசைப் பெற்றது. வகுப்பறையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பிரதானமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது.