ஹாரிபாட்டரும் ஃபினிக்ஸ் கட்டளையும் என்ற பெயரில் நாளை உலகமெங்கும் திரையிடப்படவுள்ள ஹாரிபாட்டர் கதையின் ஐந்தாம் பகுதி முதல் 5 நாட்களுக்கு மட்டும் 128 மில்லியன் டாலர்கள் அளவிற்கு முன்பதிவாகியுள்ளது!
உலக திரைப்பட வரலாற்றில் முன்பதிவில் பெரும் சாதனை நிகழ்த்திய ஸ்பைடர்மேன்-3, ஹாரிபாட்டர்-1, 2, 3, லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்படங்களின் முன்பதிவு சாதனையை முறியடித்துவிட்டு படுவேகமாக புதிய சாதனை படைத்துள்ளது வெளிவருவதற்கு முன்னரே ஹாரிபாட்டர்-5.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பள்ளிச் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமான ஹாரிபாட்டர் கதையின் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த 5வது இறுதி திரைப்படத்தைக் காண ஆசிய நாடுகளில் கூட பள்ளிச் சிறுவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
சென்னையில் மட்டும் நாளை 10 திரையரங்குகளில் ஹாரிபாட்டரும் ஃபினிக்ஸ் கட்டளையும் ஒரே நேரத்தில் திரையிடப்படுகிறது என்பது, அந்த அளவிற்கு இத்திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதைக் காட்டுகிறது.
ஜே.கே. ரௌலின் எழுதிய ஹாரிபாட்டர் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொடர்கதை போல எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் 5வது பகுதி இதுவரை வெளிவந்த மற்ற 4 திரைப்படங்களை விட நீளத்தில் குறைவானதாகும்.
தன்னைத் தாக்கவரும் பகை சக்திகளிடம் இருந்து ஹாரி எவ்வாறு பாதுகாத்துக் கொள்கின்றார் என்பதே இக்கதையின் மைய கருத்தாகும். இப்படிப்பட்ட கதைக்கு தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த மேற்கத்திய சினிமாக்காரர்களுக்கு படமெடுக்கவா தெரியாது. மிகச் "சிறப்பாக" அதனைச் செய்து முடித்துள்ளனர் என்று விமர்சனங்கள் கூறுகின்றன.