போல்டன் காம்ப்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் வாயிலாக புதிய ஜேம்ஸ்பாண்டாக அறிமுகமாகவிருக்கும் நடிகர் டேனியல் கிரைக், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பனிக் கரடிகள் நிறைந்துள்ள ஆர்டிக் துருவத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்!
சாகச எழுத்தாளர் ஃபிலிப் புல்மோனின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்திற்காக ஆர்டிக் துருவப் பகுதியில் படப் பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு ஏராளமாக வாழ்ந்துவரும் பனிக் கரடிகளால் படப்பிடிப்புக் குழுவினருக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளது.
எங்கே தங்களது புதிய ஜேம்ஸ்பாண்டிற்கு இந்தப் பனிக் கரடிகளால் ஆபத்து ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்கின்ற அச்சத்தில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும், இயக்குநரும் உள்ளனர்.
ஆனால் அதையெல்லாம் பற்றி சற்றும் கவலைப்படாத ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரைக், ஃபிலிப் புல்மோனின் நாவல்களின் தீவிர ரசிகன் தான் என்றும், அவருடைய நாவல் சிறந்த திரைப்படமாக வர தான் உழைத்து வருவதாகவும், தனது உயிருக்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.