ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக்கயிருப்பதாக தயாரிப்பாளர் அதுல் அக்னிஹோத்ரி தெரிவித்திருந்தார். இதையடுத்து ஏகப்பட்ட வதந்திகள். சல்மான்கான் ரஜினியாக நடிக்கிறார் என்பது அதில் ஒன்று.
ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரங்களையும் அறுவடை செய்ய அவரது குடும்பத்தினரே தயாராக உள்ளனர். பாபா படத்தின் போது இதனை கண்கூடாக கண்டோம். ரஜினியின் வாழ்க்கை வரலாறு என்பது தங்கச் சுரங்கம். அதனை வேறொருவர் எடுக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ரஜினியின் இளைய மகன் சௌந்தர்யா இதனை தெளிவுப்படுத்தியிருக்கிறார். ரஜினியின் வாழ்க்கை வரலாறை எடுக்க யாருக்கும் அனுமதி தரவில்லை, தேவைப்பட்டால் வாழ்க்கை வரலாறை நாங்களே எடுப்போம்.
ஆக, இந்தப் படம் தொடங்கப்படுமா என்பதே சந்தேகம் என்ற நிலையில் பரபரப்புக்காக சல்மானை உள்ளே இழுத்தனர் சிலர். இதற்கு அவரும் பொறுப்பாக பதிலளித்துள்ளார். நான் ரஜினி ரசிகன்தான், அதற்காக ரஜினியாக மாற ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. இந்திய சினிமாவில் ஒரேயொரு ரஜினிதான், ஒரேயொரு சல்மான்கான்தான் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
தேவையில்லாமல் பரபரப்பு கிளப்புகிறவர்கள் திருந்துவார்களாக.