காரியவாதி அரசியல்வாதிகளுக்கு நடுவில் தமிழ் உணர்வை காட்டுவதில் கறாராக இருக்கிறாரே சீமான் என்று மகிழாத தமிழ் மனம் இல்லை. ஆனால் இந்தக் கறார் உணர்வாளர் தனது கொள்கையிலிருந்து திடீரென கவிழ்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இலங்கையில் நடந்த பட விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களின் படங்களையும் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னகத்திலுள்ள ஐந்து மாநிலங்களிலும் அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. பட விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை சென்னை திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்து, இந்தச் செயல் திட்டத்தை தொடங்கி வைத்தவர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சியினர். (அதே நேரம் இலங்கை படவிழாவில் கலந்து கொண்ட கத்ரினா கைஃபின் ராஜ்நீதி திரைப்படம் இன்னும் சென்னையில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது).
இந்த இனத்துரோக படவிழாவில் பங்கேற்றதுடன் தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தி ராஜபக்சேயின் முதல்தர அடிவருடி என்ற பெயரை தட்டிச் சென்றவர் விவேக் ஓபராய். படவிழா முடிந்த பிறகும் கொலைகாரன் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் தங்கியிருந்ததுடன் அவன் ஏற்பாடு செய்த கண் துடைப்பு திருமண விழாவுக்கு சீஃப் கெஸ்டாக சென்று தமிழர்களின் உணர்வை காலில் போட்டு மிதித்த நடிகர் விவேக் ஓபராய்.
இந்த விவேக் ஓபராயை சீமான் மன்னித்துவிட்டாராம். ஏதற்கு?
விவேக் ஓபராய் நடித்த ரத்த சரித்திரம் ஆகஸ்டில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு எதிராக சீமான் போராட்டம் நடத்த மாட்டாராம். ரத்த சரித்திரத்தில் சூர்யா நடித்திருப்பதால் விவேக் ஓபராயை மன்னித்து படத்தை வெளியிட அனுமதிப்பாராம். ரத்த சரித்திரத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது சூர்யாவுக்கு எதிரான போராட்டமாகிவிடுமாம்.
பத்து கோடி தமிழர்கள் சம்பந்தப்பட்ட உணர்வுமிக்க விஷயத்தில் தன்னிச்சையாக பொது மன்னிப்பு வழங்க சீமான் யார்? எப்போது அவர் பாவமன்னிப்பு வழங்கும் பாதிரியானார்?
சொந்த பிள்ளைகளுக்காகவும், உடன்பிறவா சொந்தங்களுக்காகவும் கொள்கையை பறக்கவிடும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் சீமானுக்கும் என்ன வித்தியாசம்? கட்சி தொடங்கி இரண்டு மாதம்கூட பூர்த்தியாகாத நிலையில், எதற்காக கட்சி தொடங்கினாரோ அந்தக் கொள்கையையே ஏதோ ஒரு தம்பிக்காக விட்டுத் தருகிறார் என்றால் நாளை இன்னொரு தம்பிக்காக தமிழர்களையே கை கழுவ மாட்டார் என்று எப்படி நம்புவது?
மற்றவர்கள் ஒரு சயனைடு குப்பியை கழுத்தில் தொங்கவிட்ட போது தனது குடும்பத்தினரின் கழுத்தில் இரு சயனைடு குப்பிகளை தொங்கவிட்ட தமிழீழ தேசியத் தலைவரின் தம்பி என்று சொல்லிக் கொள்கிற தகுதி தனக்கிருக்கிறதா என்று சீமான் எண்ணிப் பார்க்க வேண்டும்.