தயாரிப்பாளர், இயக்குனர் உறவு தாமரை இலை தண்ணீர் மாதிரி. ஒட்டவே ஒட்டாது. முதல் படத்திலேயே பிய்த்துக் கொண்டு பரஸ்பரம் முறைத்துக் கொண்டவர்களே அதிகம். இரண்டாவது படம்...? அத்தி பூத்தார்போல எப்போதாவது சாத்தியமாகும்.
ஆச்சரியமாக அடுத்தடுத்து தனது அனைத்துப் படங்களையும் ஒரே தயாரிப்பாளருக்கு இயக்கிக் கொண்டிருக்கிறார் ராதாமோகன்.
பிரகாஷ்ராஜின் நண்பர் ராதாமோகன். அவரது அழகிய தீயே படத்தை தனது டூயட் மூவிஸ் சார்பில் தயாரித்தார் பிரகாஷ்ராஜ். படம் கமர்ஷியலாக பெரிதாக போகவில்லை. இருந்தும் அடுத்தப் படமான மொழியையும் பிரகாஷ்ராஜே தயாரித்தார். மூன்றவதாக அபியும் நானும். ஹாட்ரிக் படங்களுக்குப் பின்பும் உடையவில்லை இந்தக் கூட்டணி.
அடுத்து ஆக்சன் படத்தை இயக்குகிறார் ராதாமோகன். ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என யாரும் முடிவாகவில்லை. முடிவான ஒரே விஷயம் தயாரிப்பாளர்.
ராதாமோகனின் நான்காவது படமான இதனையும் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸே தயாரிக்கிறது. ஆச்சரியமான கூட்டணிதான்!