நகைச்சுவை நடிகராக அறியப்பட்டாலும் ரமேஷ் கண்ணாவின் ஆசை படம் இயக்குவது. அதற்காகதான் சினிமாவுக்கே வந்தார். வந்த வழியில் பாதை மாறி கமெடியனானது தனி ட்ராக்.
அஜித், தேவயானி, ஹீரா நடித்த தொடரும் படம் இவர் இயக்கியதுதான். துரதிர்ஷ்டமாக மலையாளத்தில் வெற்றிபெற்ற இப்படம் தமிழில் சரியாகப் போகவில்லை. தொடரும் தோல்விக்குப் பிறகு மீண்டும் காமெடியனாக கண்டினியூ செய்தார். இப்போது படம் இயக்கும் வாய்ப்பு மீண்டும் கதவை தட்டியிருக்கிறது.
யார் தயாரிப்பாளர், ஹீரோ என்பது பற்றியெல்லாம் பேச இப்போதைக்கு ரமேஷ் கண்ணா தயாரில்லை. வாய்ப்பு வாழைப்பழத் தோலாக வழுக்கினால் என்ன செய்வது? கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஆதவன் படத்துக்கு இவர்தான் கதை. ஆதவன் உதயமான பிறகு தனது படம் குறித்து அறிவிக்க முடிவு செய்துள்ளாராம்.
இயக்குனராக ரமேஷ் கண்ணா வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஒரு காமெடியன், வரவு ஒரு இயக்குனர். இறுதி தீர்ப்பு ரசிகர்கள் கையில்.