இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், இந்திய அரசு சிங்கள ராணுவத்துக்கு ராணுவ உதவி செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எழுச்சிமிகு இந்தப் போராட்டத்தில் தன்னைத்தானே எரித்துக் கொண்டு இன்னுயிரை மாய்த்திருக்கிறார், முத்துக்குமார்.
கொளத்தூரில் வைக்கப்பட்டிருக்கும் முத்துக்குமாரின் உடலுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததால் நேற்று நடப்பதாக இருந்த இறுதிச் சடங்கு இன்றைக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் முத்துக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய நடிகர் சத்யராஜ் துக்கம் தாளாமல் கதறி அழுதார். அதுபோல் கவிஞர் தாமரையும் கண்ணீர்விட்டு கதறியது மனதை உருக்குவதாக இருந்தது.
இயக்குனர்கள் சீமான், ஆர்.கே. செல்வமணி, ஆர். சுந்தர்ராஜன், அமீர், ஷரவண சுப்பையா, தங்கர்பச்சான் உள்ளிட்ட ஏராளமானோர் முத்துக்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அனைத்து இயக்குனர்களும் அவரது உடல் அருகில் வீரகோஷமிட்டது தமிழர்களின் உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இன்று நடிகர் சங்கத்தில் முத்துக்குமாரின் உருவப்படம் திறக்கப்பட்டு அவரது தியாகத்துக்கு புகழஞ்சலி செலுத்த இருக்கிறார்கள் தமிழ் திரைப்பட நடிகர்கள்.