சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப் 5 மூவிஸில் முதலிடத்தை படிக்காதவன் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் விஜயின் வில்லு உள்ளது.
5. என்னை தெரியுமா?
மோகன்பாபுவின் மகன் மனோஜ்குமார் நடித்திருக்கும் இப்படம் கஜினியின் ஷார்ட்டேர்ம் மெமரி பிரச்சனையை மையமாகக் கொண்டுள்ளது மிகப் பெரிய பலவீனம். பிரபலமில்லாதவர்கள் நடித்திருப்பது படத்தின் தோல்வியை உறுதி செய்துள்ளது. வெளியான முதல் 3 நாட்களில் சென்னையில் ஐந்து லட்சங்கள் மட்டுமே வசூலித்துள்ளது இப்படம்.
4. காதல்னா சும்மா இல்ல
மீடியா இருந்தும் சரியாக விளம்பரப்படுத்தப்படாதப் படம் காதல்னா சும்மா இல்ல. பிரபலங்கள் இல்லாததே இந்தப் படத்தின் குறை. விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக சுமார் சர்ட்டிபிகேட்டே இப்படத்துக்கு கிடைத்துள்ளது. சென்ற வாரம் ஆறு லட்சங்கள் வசூலித்துள்ள இப்படம் இதுவரை 26 லட்சங்களை மட்டுமே ஈட்டியுள்ளது.
3. அபியும் நானும்
ஆபரேஷன் சக்சஸ், பட் பேஷண்ட் டெட். இதற்கு சரியான உதாரணம் அபியும் நானும். நல்ல படம், ஆனால் சுமாரான வசூல். வார இறுதியில் 14 லட்சங்கள் வசூலித்துள்ள இந்தப் படத்தின் மொத்த வசூல், சென்னையில் மட்டும், 1.24 கோடிகள்.
2. வில்லு
2009-ன் டிராஜடி வில்லு. கதை இல்லாமல் கட்ட வண்டிகூட ஓட்ட முடியாது என்பதை தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் சொன்ன படம். சென்ற வார வசூல், 28 லட்சங்கள். இரண்டு வாரத்திற்கும் சேர்த்து 1.73 கோடிகள். விஜய் வாங்கும் சம்பளத்துக்கு இது ரொம்ப ரொம்ப கம்மி.
1. படிக்காதவன்
விளம்பரத்தால் வீணாப் போனவைகளையே விற்பனை செய்யலாம் என்பதற்கு படிக்காதன் சிறந்த உதாரணம். சன் தொலைக்காட்சியின் ஐந்து நிமிடத்திற்கொருமுறை வரும் விளம்பர வன்முறை படிக்காதவனை முதலிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. இதன் சென்றவார வசூல், 42 லட்சங்கள். மொத்த வசூல், 1.68 கோடிகள்.