கே.ராஜேஷ்வர் இயக்கும் இந்திரவிழா விரைவில் திரைக்கு வருகிறது. ஸ்ரீகாந்த், நமிதா, ஹேமமாலினி, நாசர் நடித்திருக்கும் இந்தப் படத்தைப் பற்றி சில வதந்திகள். இந்திரவிழா இந்தி ஏத்ராஸ் படத்தின் தழுவல் என்பது அதில் முக்கியமானது.
வேறு சிலர் இது ஹாலிவுட் டிஸ்குளோஷர் படத்தின் தமிழ் வடிவம் என கிசுகிசுக்கிறார்கள். உண்மை என்ன?
ராஜேஷ்வரிடம் கேட்டதற்கு, இரண்டுமே உண்மையில்லை என்றார். தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறவர் ஸ்ரீகாந்த். அவரது முதலாளி நாசர். ஒரு சந்தர்ப்பத்தில் நாசரின் மனைவி நமிதா ஸ்ரீகாந்திற்கு பாஸாக நியமிக்கப்படுகிறார். ஸ்ரீகாந்தும், நமிதாவும் முன்பு காதலர்களாக இருந்தவர்கள். அவர்கள் மீண்டும் பார்த்துக் கொள்ளும் போது ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் கதை.
ஸ்ரீகாந்தின் மனைவியாக புதுமுகம் ஹேமமாலினி நடித்துள்ளார். “ஏத்ராஸ், டிஸ்குளோஷர் இரண்டுமே இந்திரவிழாவைப் போல மூன்று பேருக்கு நடுவில் உருவாகும் உறவு சிக்கலை பற்றி பேசுகிறது. இது ஒன்றுதான் மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை. மற்றபடி இந்திரவிழாவுக்கும் ஏத்ராஸ், டிஸ்குளோஷருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார் ராஜேஷ்வர்.
படம் திரைக்கு வரும்போது மிச்ச சொச்ச சந்தேகமும் விலகிவிடும்.