இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் அறிவித்திருந்த உண்ணாவிரத போராட்டம் இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்தும், இந்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த கோரியும் பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். சென்ற மாதம் ராமேஸ்வரத்தில் திரையுலகினர் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தினர். இதில் பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் பிரச்சனைக்குரிய விஷயங்களை யாரும் பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் சங்க வளாகத்தில் இன்று காலை தொடங்கிய போராட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், விஜயகுமார், சிவகுமார், கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், சத்யராஜ;, மன்சூர் அலிகான், எஸ்.வி. சேகர், அஸ்வின் சேகர், ஷாம், பிரசன்னா, சாந்தனு, விக்ரம், பிரகாஷ் ராஜ், விவேக், வடிவேலு, அலெக்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடிகைகள் மனோரமா, சினேகா, சந்தியா, கீர்த்தி சாவ்லா, குயிலி, ராதிகா, த்ரிஷா, மும்தாஜ், லட்சுமிராய் உள்பட ஏராளமானோர் காலையிலேயே போரட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று வதந்தி கிளப்பப்பட்ட அஜீத்தும், அர்ஜுனும் காலையிலேயே போராட்ட பந்தலில் ஆஜராயினர். நடிகர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டாலும் சங்கத்தின் வேண்டுகோள் காரணமாக யாரும் பிரச்சனைக்குரிய வார்த்தைகளை தவிர்த்தே பேசினர்.
மேலும், ஈழத் தமிழருக்கு அனைத்து திரையுலகினரும் உண்ணாவிரத மேடையிலேயே நன்கொடை வழங்கி வருகின்றனர்.