சரோஜா வெளியீடு அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்போதாவது வெளியாகுமா? ரஜினியிடம்தான் இருக்கிறது அதற்கான பதில்.
குசேலனில் கொட்டிய தேளுக்கு நெறி கட்டியிருப்பது சரோஜாவில். புரியவில்லையா? விளக்கமாகவே சொல்கிறோம்.
குசேலனால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் 35 விழுக்காடு நஷ்ட ஈடு வழங்க குசேலன் தயாரிப்பாளர்களும் ரஜினியும் முன் வந்தார்கள். 35 ரொம்பக் குறைவு 70 வேண்டும் என்று கேட்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ, ரஜினி தரப்பில் இருந்தோ பதிலில்லை.
இதனால் மீண்டும் ஒன்றாம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். கேட்ட நஷ்ட ஈடு கிடைக்கவில்லை என்றால் முதல்கட்டமாக பிரமிட் சாய்மீரா வினியோக உரிமை வாங்கியிருக்கும் சரோஜாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வசம் ஏறக்குறைய 850 திரையரங்குககள் உள்ளன. இதனால் சரோஜா வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.