ரஜினியின் நெருங்கி நண்பர் மோகன்பாபு தனது லட்சுமி பிரசன்னா மூவிஸ் சார்பில் தயாரிக்கும் படம், என்னை தெரியுமா? மனோஜ் குமார் என்கிற மஞ்சு மனோஜ்குமார் ஹீரோ. இவர் மோகன் பாபுவின் இளைய மகன்.
மகனை அறிமுகப்படுத்தவும், படத்தின் ஆடியோவை வெளியிடவும் சென்னை வந்தார் மோகன்பாபு. பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தடபுடல் விழா.
மனோஜ்குமாரை பி.வாசு, பிரபு, ஏ.சி.சண்முகம், சிம்பு, ஷக்தி, சிபிராஜ், சாந்தனு வாழ்த்தி பேசினர். ஆடியோவை பி.வாசுவின் தந்தையும் பழம்பெரும் மேக்கப் கலைஞருமான பீதாம்பரம் வெளியிட பிரபு பெற்றுக் கொண்டார்.
உணர்ச்சிகள் தளும்ப பேச வந்தார் மோகன்பாபு. தமிழ்நாடு எனது தாய்வீடு. இதனை ஆந்திராவிலும் சொல்வேன். அதில் எனக்கொன்றும் பயமில்லை என்றார். ரஜினியுடன் ஆரம்ப நாட்களில் வாய்ப்புக்காக சுற்றியலைந்து, பசிக்கு சோறுதந்த தமிழர்கள், சிவாஜிக்கு வில்லனாக நடித்தது என பேச்சு நெடுக மலரும் நினைவுகள்.
ரஜினியை அவர் மைடியர் பிளடி பிரெண்ட் என உரிமையுடன் விளித்தபோது, அமர்க்களமான கிளாப்ஸ். ''என்னுடைய பல டயலாக்கை அவன் தன்னோட படங்களில் பயன்படுத்தியிருக்கிறான். கதம் கதம் நான் சொன்ன வசனம் தான். ரஜினி என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த சிறந்த நண்பன், மிகச் சிறந்த ஆத்மா''.
என்னை தெரியுமா? தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது. ரியாசென், சினேகா உல்லால் என இரு கதாநாயகிகள்.
ஜேப்பியார் பேசும் போது, மோகன்பாபுவை ஏகே 47 என வர்ணித்தார். ''அரசியல் ஒரு சாக்கடை, அதனால் அதிலிருந்து திரும்பி வந்து விட்டேன்'' என, சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கும் வேளை பொது மேடையில் மோகன்பாபு பேசிய துணிச்சலுக்கு ஏகே 47 உவமை பொருத்தமாகவே இருந்தது.