மீண்டும் கமலுடன் அசின். இந்த முறை பரத்பாலா இயக்கும் படத்துக்காக. பரத்பாலா புரொடக்சன் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து '19 ஸ்டெப்ஸ்' (19 Steps) என்ற படத்தை தயாரிக்கிறது. இந்தோ-ஜப்பான் கூட்டுத் தயாரிப்பான இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கதையாம்.
கேரளாவின் பாரம்பரிய களரிச் சண்டையை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகிறது. களரி கற்றுக் கொடுக்கும் ஆசானாக வருகிறார் கமல். அவரிடம் ஜப்பானிய இளைஞன் ஒருவன் களரி கற்றுக் கொள்கிறான். இந்த இளைஞன் மீது மையல் கொள்கிறாள் அப்பகுதியன் இளவரசி.
ஜப்பான் இளைஞனாக ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர் Tadanobu Asano நடிக்கிறார். இளவரசியாக அசின். எழுத்தாளர் எம்.டி. வாசுதேவனின் கதைக்கு ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர்கள் திரைக்கதை அமைக்கிறார்கள். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஜப்பான் மொழிகளில் இப்படம் தயாராகிறது. படத்தின் உத்தேச பட்ஜெட் 50 மில்லியன் டாலர்கள்.
அடுத்த வருடம் தொடங்கயிருக்கும் இப்படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். இவரது வந்தேமாதரம் வீடியோ ஆல்பத்தை தயாரித்தது பரத்பாலா என்பது குறிப்பிடத்தக்கது.