கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்தநாள் நேற்று பொன்மணி மாளிகையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு சிறப்பு விருதினையும், 20 ஆயிரத்துக்கான பண முடிப்பையும் வைரமுத்து வழங்கினார்.
வைரமுத்து எழுதியுள்ள 'பாற்கடல்' புத்தகமும், கவிஞருடனான அனுபவத்தை 'ஒரு தோப்புக் குயிலாக' என்ற புத்தகத்தின் மூலமாக எழுதியுள்ள மரபின்மைந்தன் முத்தையாவின் நூலும் திறனாய்வு செய்யப்பட்டன.
விழாவில் நிறைவுரை ஆற்றிய வைரமுத்து, "என்னிடம் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு குணம் உண்டு. நான் யாரைப் பற்றியும் பொறாமைப் படுவதில்லை. பொறாமை என்பது களை. நான் பயிராகவே இருக்க ஆசைப்படுகிறேன். களையாக இல்லை. எவனுக்கு தன்னம்பிக்கை அதிகமோ அவன் பொறாமைப்பட மாட்டான்.
தமிழுக்காகவும், தமிழருக்காகவும் உழைத்துக்கொண்டே இருப்பதுதான் எனது மிச்ச வாழ்க்கையில் நான் எழுதி வைத்துள்ள சாசனம். உலகத்தின் மூத்த மொழிகள் 5 என்றால், 5ல் 1 தமிழல்லவா?" என்று உணர்ச்சி மேலிட உரை நிகழ்த்தினார்.