அபூர்வ சகோதரர்கள், சதிலீலாவதி, தசாவதாரம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. கமல் நடித்தப் படங்கள் என்பதைத் தாண்டி இவை அனைத்தும், ஏற்கனவே வெளிவந்த படங்களின் பெயர்கள்.
கமலின் புதிய படம் மர்மயோகியும் பழைய படத்தின் பெயர் என்பது பலருக்கு தெரியாது. தொடர்ந்து பழைய படங்களின் பெயர்களை வைப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.
புதிய படங்களுக்கு பழைய பெயர்களை வைப்பதை, பழைய படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. தங்கள் படங்களை அவர்கள் ரீ-மேக் செய்ய விரும்பும் போது அதே பெயரில் வேறு கதையை வைத்து ஏற்கனவே படம் வெளிவந்திருக்கும். இது தங்களுக்கு தலைவலியாக இருப்பதாக தயாரிப்பாளர்களும், அவர்களது வாரிசுகளும் புகார் தெரிவித்தனர்.
தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டது. இனி பழைய படங்களின் பெயர்களை வைக்க விரும்புகிறவர்கள், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து அல்லது அவரது வாரிசுகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என நிபந்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தசாவதாரம் படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது என்பதால் இந்த நிபந்தனை தசாவதாரத்தை கட்டுப்படுத்தாது. அதேநேரம், மர்மயோகி படத்துக்கு கமல் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும்.
ராஜ்கிரணின் மலைக்கள்ளன், தனுஷின் படிக்காதவன் படங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.