தமிழ்நாட்டில் ரஜினியின் தலை தெரிந்தாலே திருவிழாக் கூட்டம் சேரும். பப்ளிக்கில் அவரை வைத்து படம் இயக்குவதெல்லாம் யானை கட்டி போரடிப்பது போல. ரொம்ப அவஸ்தை.
அதனால்தான், படப்பிடிப்பு என்றாலே ஆந்திரா எல்லையைத் தாண்டிவிடுவார் ரஜினி. அவரை பொள்ளாச்சி அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் பி. வாசு.
ஹைதராபாத்தில் தொடங்கிய குசேலன் படப்பிடிப்பு, பொள்ளாச்சியில் தொடர்கிறது. ரஜினி, நயன்தாரா, பசுபதி, வடிவேலு கலந்துகொள்வதாக செய்திகள் கூறுகின்றன. இதற்காக பொள்ளாச்சியை சுற்றியுள்ள வேட்டைக்காரன் புதூர், கிணத்துக்கடவு, புரவிபாளையம் பகுதிகளில் லொகேஷன் பார்த்து திரும்பியிருக்கிறது குசேலன் படக்குழு.
பொள்ளாச்சியில் ரஜினி லேண்ட் ஆனால் புற்றீசலாக கூட்டம் சேரும். அவர்களை கட்டி மேற்பதற்குள் கண்ணில் தண்ணி வந்துவிடும். போலீசை குவித்தாலும் படப்பிடிப்பை நடத்துவது கஷ்டம். பி. வாசு இடத்தை மாற்றுவாரா? இல்லை ரிஸ்க் எடுப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!