"ரஜினி எனக்கு வழிகாட்டி, ஆசான், நண்பர்..." தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உணர்ச்சிவசப்பட்டு பேசியது குசேலுடு படத்தின் தொடக்க விழாவில்!
ரஜினி நடிக்கும் குசேலன் குசேலுடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராகிறது. அஸ்வினி தத்தின் வைஜெயந்தி மூவிஸ் படத்தை தயாரிக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த தொடக்க விழாவில் ரஜினி, சிரஞ்சீவியுடன் ரஜினியின் அரசியல் நண்பர்கள், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவும் கலந்துகொண்டனர்.
சிரஞ்சீவி கிளாப் அடிக்க, சந்திரபாபு நாயுடு கேமராவை இயக்கி படத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினியுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். ரஜினிக்கு போட்டி அவரேதான். அவர் ஒரு மாமனிதர் என்றெல்லாம் புகழ்ந்தார். இறுதியில் ரஜினிக்கு சமுதாயத்திற்காக பாடுபடும் எண்ணம் இருப்பதாக அரசியல் பொடி வைத்து பேச்சை முடித்துக்கொண்டார்.
தனது மகளின் காதல் திருமணத்தின் போது மனநெருக்கடிக்கு ஆளானதையும், அந்த நேரம் ரஜினியுடன் ஒரு நாள் முழுவதையும் ஒன்றாக கழித்ததையும் சிரஞ்சீவி நினைவுகூர்ந்தார். "அன்றைய தினம் ரஜினிக்குள் ஒரு ஞானி இருப்பதை கண்டுகொண்டேன்" என்றார் நிஜமான ஆச்சரியத்துடன்.
ரஜினி தெலுங்கில் நடித்த முதல் படத்தை அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவ் கிளாப் அடிக்க, நாகேஸ்வரராவ் தொடங்கி வைத்தார். தனது பேச்சில் இதனை குறிப்பிட்ட ரஜினி, அதேபோல் இந்தப் படத்தையும் பெரியவர்கள் சேர்ந்து தொடக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.