Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2009 அரையாண்டு படங்கள் ஓர் அலசல்

2009 அரையாண்டு படங்கள் ஓர் அலசல்
, வெள்ளி, 10 ஜூலை 2009 (14:24 IST)
சென்ற வருடம் கிடைத்த பாடங்களிலிருந்து தமிழ் சினிமா எதையும் கற்றுக் கொண்டதாக‌த் தெ‌ரியவில்லை. 2008 வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 84. அதில் கரை சேர்ந்தவை ஏழே ஏழு.

webdunia photoWD
தமிழ் சினிமாவின் வியாபாரத்தை விஸ்த‌ரிக்கும் என்று எதிர்பார்த்த குசேலன், பீமா, குருவி, ஏகன், சத்யம் என மெகா பட்ஜெட் படங்கள் அனைத்தும் பெருத்த நஷ்டத்தை சந்தித்தன. தமிழ் சினிமாவை ஓரளவு காப்பாற்றியவை என்றால் அது புதியவர்களின் சமரசமற்ற முயற்சிகளான சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, சரோஜபோன்ற பட்ஜெட் படங்கள் மட்டுமே.

சினிமாவின் முகத்தை ஹைடெக்காக மாற்றப் போவதாகக் கூறிய கார்ப்பரேட் ஜாம்பவான்கள் ஒருவர் பாக்கி இன்றி அனைவரும் மண்ணை கவ்வினர்.

எளிமையான கதை, சிறந்த திரைக்கதை, யதார்த்தத்தை மீறாத காட்சிகள். இவை இருந்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் வெற்றி பெறும் என்பது சென்ற வருடம் கிடைத்த பாடம். இந்த வருடத்தின் முதல் ஆறமாத கால தமிழ் சினிமா வியாபாரம் அந்த பாடத்தை மீண்டும் உண்மையாக்கியிருக்கிறது.

ஜூன் 30 வரை ஏறக்குறைய 51 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தவை ஒன்பது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நம்ப முடியாத முன்னேற்றம். ஆனால் இது போதுமா?

webdunia
webdunia photoWD
பஞ்ச் டயலாக், பரபர சண்டைக் காட்சிகள், கால் மணிக்கு ஒரு குத்துப் பாட்டு என ஸ்டார் வேல்யூ ஃபார்முலாவில் வந்த ஏறக்குறைய அனைத்துப் படங்களும் இந்த வருடமும் பணால். விஜய்யின் வில்லு, விஷாலின் தோரணை சிறந்த உதாரணங்கள். பழைய ஃபார்முலாவில் வெளிவந்த ம‌ரியாதைக்கும் வரவேற்பில்லை.

இந்த ஆறு மாத காலத்தில் வெற்றியை அறுவடை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். முதலில் வெண்ணிலா கபடிக்குழு. ஸ்டார் வேல்யூ இல்லாத சராச‌ரி நடிகர்களால் உருவான படம். இயக்குனர் சுசீந்திரனுக்கும் இதுவே முதல் படம். எளிமையான கிராமத்து இளைஞர்களின் கபடி ஆசையின் வழியாக அவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்திய இப்படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. இதன் வெற்றி யதார்த்த சினிமாவுக்கான இருப்பை உறுதி செய்தது.

ஆவி கதையுடன் வந்த யாவரும் நலம் இந்த வருடத்தின் எதிர்பாராத ஆச்ச‌ரியம். மாதவன் என்ற ஹீரோ நடித்திருந்தாலும் இயக்குன‌ரின் பழமை தவிர்த்த புதுமை சிந்தனையே படம் வெற்றியின் படிக்கட்டில் ஏற உதவியது.

webdunia
webdunia photoFILE
சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சசிகுமா‌ரின் தயா‌ரிப்பில் வெளிவந்த படம் பசங்க. பதினாலு வயது சிறுவர்கள் நடித்த இந்தப் படம் ஸ்டார் வேல்யூ இல்லாமலே பாக்ஸ் ஆபிஸை கலங்கடித்தது.

பத்து இயக்குனர்கள் நடித்த மாயாண்டி குடும்பத்தார் பி அண்டு சி சென்டர்களில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. நஷ்டத்தை சந்திக்காத படங்களின் வ‌ரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். சமீபத்தில் வெளியான நாடோடிகளும் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

நாம் மேலே பார்த்த ஐந்து படங்களும் இரண்டிலிருந்து நான்கு கோடிக்குள் தயாரானவை. பிரமாண்டமான அரங்குகள், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தேவையற்ற சண்டைக் காட்சிகள் போன்ற தமிழ் சினிமாவின் சாபக் கேடுகள் ஏதுமற்றவை. எளிமையான கதையையும், யதார்த்தமான காட்சிகளையும், அ‌ரிதாரம் பூசாத நடிகர்களையும் நம்பி எடுக்கப்பட்டவை.

இந்த ஆறுமாத காலத்தில் வழக்கமான ஃபார்முலாவில் ஜெயித்த படங்கள் நான்கு. படிக்காதவன், சிவா மனசுல சக்தி, அயன், மாசிலாமணி. இவற்றில் படிக்காதவன், சிவா மனசுல சக்தி, மாசிலாமணி ஆகியவை வெற்றி பெற்றதில் அப்படத்தின் தயா‌ரிப்பாளர்கள் தண்ணியாக செலவழித்த விளம்பர பணத்துக்கு கணிசமான பங்குண்டு.

webdunia
webdunia photoWD
இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் என்றால் அது அயன். கே.வி.ஆனந்தின் இப்படம் தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கடத்தல் கதையை பிரமாண்டமாக காட்டியது. சூர்யாவின் நடிப்புக்கும், தொழில்நுட்பத்துக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு.

நல்லவனான ஹீரோ, கெட்டதை மட்டுமே செய்யும் வில்லன், டூயட்டுக்கு ஒரு ஹீரோயின் என்ற வழக்கமான அம்மாஞ்சித்தனங்கள் இந்த வருடம் வெற்றிபெற்ற படங்களில் இல்லை. விதிவிலக்குகள் படிக்காதவனும், மாசிலாமணியும்.

ஒரு படத்தின் வெற்றி இயக்குன‌ரின் கையில் இருக்கிறது. சிலர் நம்பிக் கொண்டிருப்பதுபோல் ஹீரோவோ, பிரமாண்டமோ அல்ல படத்தின் வெற்றியை தீர்மானிப்பது. எளிமையான கதையிலேயே எவரெஸ்டை தொடலாம். புதியவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். உணர்ந்து திருந்த வேண்டியது ஒவ்வொருவ‌ரின் கடமை.

Share this Story:

Follow Webdunia tamil