Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெஞ்சு எரிச்சலுக்கு லாப்ராஸ்கோப்பி சிகிச்சை

Advertiesment
நெஞ்சு எரிச்சல் லாப்ராஸ்கோப்பி சிகிச்சை குடல் வால்வு
, செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (11:02 IST)
பொதுவாக நெஞ்சு எரிச்சல் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை எனலாம். உணவை உட்கொள்ளும்போது, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் இருக்கும் வால்வு திறக்கிறது.

சாப்பிட்ட பின் வால்வு மூடி விடும். இந்த வால்வு சரியாக மூடாமல் இருந்தால் இரைப்பையில் இருக்கும் அமிலம் கலந்த உணவு, உணவுக் குழாய்க்கு வரக்கூடும். அப்படி உணவுக்குழாய்க்கு அமிலம் கலந்த உணவு வருவதாலேயே நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.

வலுவிழந்த வால்வே நெஞ்சு எரிச்சலுக்கு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மனோநிலையும், நம் உணவுப் பழக்க வழக்கங்களும் நெஞ்சு எரிச்சலை அதிகப்படுத்தக்கூடும். குறிப்பாக அதிக மன அழுத்தம் மற்றும் மனக் கவலை உள்ளவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் அதிகமாக இருக்கும்.

அத்துடன் தொடர்ந்து மது அருந்துதல் மற்றும் புகைப் பழக்கமும் நெஞ்சு எரிச்சல் பிரச்சினையை நீடிக்கச் செய்கிறது. அதிக காரம், அதிக எண்ணெய், பொரித்த உணவுப் பண்டங்கள், அதிக காபி மற்றும் டீ ஆகியவை தொடர் நெஞ்சு எரிச்சலுக்குக் காரணமாகலாம்.

முழு வயிறு சாப்பிட்டால் கூட நெஞ்சு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். வயிற்றின் மேல் பகுதியில் வலி, புளித்த ஏப்பம் போன்றவை நம்மை கஷ்டப்படுத்தும். இந்தப் பிரச்சினை, சில நேரங்களில் மார்பின் நடுப்பகுதியில் வலியை ஏற்படுத்தி, மாரடைப்பா என பயப்படக் கூடிய அளவுக்குக் கொண்டு போய்விடும்.

அத்துடன் சில சமயம் உணவுக்குப் பின் படுக்கையில் படுத்தால், அமிலம் கலந்த உணவு வாய்க்கே வந்து விடலாம்.

நெஞ்சு எரிச்சலை இரைப்பை உள்நோக்கி (எண்டோஸ்கோப்பி) மூலம் எளிதில் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு உள்நோக்கி மூலம் சோதனை செய்வதால் உணவுக் குழாயின் கடைசிப் பகுதி வரை ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தெரிந்து விடும்.

வால்வின் அமைப்பு குறித்த விவரங்களும் தெரிந்து விடும். வால்வின் தன்மையை அறியவும் முன் குடல் பகுதியிலிருந்து அமிலம், உணவுக் குழாயை நோக்கி மேலே வருவதைக் கண்டுபிடிக்கவும் சிறப்புப் பரிசோதனைகள் உள்ளன.

இந்தப் பரிசோதனைகளின் மூலம் நெஞ்சு எரிச்சலின் தீவிரத் தன்மையைத் துல்லியமாகக் கணித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு இரைப்பை - குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களை அணுகி லாப்ராஸ்கோப்பி சிகிச்சையை மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்களால் மட்டுமே நெஞ்சு எரிச்சலுக்கு உரிய சிகிச்சையை அளித்து பூரண குணத்தை அளிக்க முடியும். எனவே அதுபோன்ற மருத்துவர்களை அணுகி நிவாரணம் பெறுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil