வழக்கமாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாகும். புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதத்தில் தான் தீபாவளி பண்டிகை வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில், அதுவும் 5ஆம் வார சனிக்கிழமையில் தீபாவளிப் பண்டிகை வந்துள்ளது. அன்றைய தினம் பெருமாளுக்கு பூஜை செய்வதா அல்லது தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடுவதா என்று பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.65
ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் தீபாவளிப் பண்டிகை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தமிழர் திருநாளுக்கு அடுத்தபடியாக வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் தீபாவளிப் பண்டிகையாகும். காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து இனிப்புகள் உண்டு மகிழும் இந்த தீபாவளிப் பண்டிகை குழந்தைகள் அதிகம் விரும்பும் பண்டிகையாகும். மேலும், அசைவப் பிரியர்கள், தீபாவளி அன்று அசைவ உணவுகளை வகை வகையாக சமைத்து உண்டு மகிழ்வார்கள்.தீபாவளிப் பண்டிகை, இந்துக்களால் மட்டுமின்றி ஜாதி, மதங்களைக் கடந்து அனைத்து மதத்தவராலும் கொண்டாடும் பண்டிகை என்று கூட சொல்லலாம்.தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தைக் கருத்தில் கொண்டு குதூகலத்துடன் கொண்டாடக்கூடிய தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு புரட்டாசி மாதத்திலேயே வருகிறது என்பது முக்கிய விஷயமாகும். பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்து, சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு, புரட்டாசி மாதம் 5ஆம் சனிக்கிழமை அன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இது போன்று புரட்டாசி மாதத்தில் தீபாவளி வருவது மிக மிக அரிதான நிகழ்வு ஆகும். 65 ஆண்டுகளுக்கு முன், `தாரண' ஆண்டு புரட்டாசி மாதம் 31-ந் தேதி (16-10-1944. திங்கட்கிழமை) இப்படி முன்கூட்டியே தீபாவளி கொண்டாடப்பட்டு உள்ளது. இதுபோன்று ஐப்பசி மாதத்துக்கு முன், புரட்டாசி மாதத்திலேயே தீபாவளி வருவதால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எவ்வித கெடுபலனும் இல்லை.தீபாவளியை எப்போது கொண்டாடலாம்? என்பது பற்றி எங்களது ஜோதிடர், ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரனிடம் கேட்டதற்கு, ந்தாண்டு (அக்டோபர் 17ஆம் தேதி) சதுர்த்தசி திதி இருக்கும் போதே தீபாவளி வந்து விடுகிறது. அக்டோபர் 16ஆம் தேதி இரவு துவங்கும் சதுர்த்தசி திதி, 17ஆம் தேதி நண்பகல் வரை நீடிக்கிறது. அதன் பிறகு அமாவாசை. எனவே, சனிக்கிழமை காலை முதலே தீபாவளியைக் கொண்டாடலாம். நரகாசுரனை அழித்த தினமே தீபாவளி என தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது. எனவே, தீயவற்றை அழித்து, நல்லவற்றை எடுத்துக் கொள்வதே தீபாவளி தினத்தின் உள்நோக்கம். வட இந்தியாவில் லட்சுமி குபேர பூஜையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தில் அசைவ உணவுகள் சாப்பிடலாமா என்பது பற்றி எதுவும் பழங்கால நூல்களில் குறிப்பிடப்படவில்லை. புனித நதிகளில் நீராட வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளன. எனவே, அசைவ உணவுகளை தவிர்ப்பதும், சாப்பிடுவதும் அவரவர் மன, உடல்நிலையைப் பொறுத்தது என்று கூறியுள்ளார்.