தருமபுரி மாவட்டத்தில் பழங்குடிகள் வாழ்ந்துவரும் வாச்சாத்தி கிராமத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் வன அலுவலர்களும், காவல் அதிகாரிகளும், தாசில்தார், கிராம அலுவலர் ஆகியோர் தலைமையில் புகுந்த 259 பேரைக் கொண்ட பெரும் அரசுப் படை நடத்திய அராஜக வெறியாட்டத்திற்கு இன்று தருமபுரி அமர்வு நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை வழங்கியுள்ளது.
அப்பாவி பழங்குடி மக்களை சுற்றி வளைத்து, ‘சந்தன மரங்களை வெட்டி எங்கே மறைத்து வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டு இவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளை, வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் (கற்பழிப்பு), அத்துமீறல் போன்ற பல்வேறு குற்றச்சாற்றுகளாக மத்திய புலனாய்வுக் கழகம் பதிவு செய்தது ஆதாரப்பூர்வமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி நீதிபதி குமரகுரு தண்டனைத் தீர்ப்பளித்து வருகிறார்.
நீதிபதி குமரகுரு அளிக்கும் தண்டனைதான் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நியாயமான திருப்தியை அளிக்கும் என்பது மட்டுமின்றி, இதற்கு மேலும் இப்படிப்பட்ட கொடுமைகள் தமிழ்நாட்டில் அரங்கேறாமல் தடுப்பதாகவும் அமைய வேண்டும்.
ஏனெனில், நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை அது நலிந்த, ஏழை, எளிய, பழங்குடி மக்களை, தங்களுடைய உரிமைகள் இன்னது என்று அறியாத அந்த அப்பாவிகளை எல்லா விதத்திலும் காப்பாற்றும் வகையில் உள்ளது. அதனடிப்படையில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறையிலும் உள்ளன.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானாலும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் பொதுவானது என்றாலும், அது பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கென்றே சில திருத்தங்களுடன் (Panjayat raj - extended to Scheduled Areas Act - PESA) பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இப்படிப்பட்ட சட்டங்களின் இருப்பையே அறியாத மக்களை, அரசு அதிகாரிகளில் இருந்து பெரு நிறுவனங்கள் வரை ஏமாற்றி வஞ்சித்து வருகின்றன என்பதே நமது நாட்டின் எதார்த்தமாகவுள்ளது.
வனங்களிலும், மலைப் பகுதிகளிலும் வாழும் பழங்குடி, பூர்வீக மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு, நமது பிரதமர் மன்மோகன் சிங் பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு தொடர்பாக மத்திய வனம் மற்றும் சமூக நல அமைச்சகம் ஏற்பாடு செய்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு ஆற்றிய உரையையே உதாரணமாகத் தரலாம்.
மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றப் பிறகு, 2009ஆம் ஆண்டு நவம்பர் 04ஆம் தேதி டெல்லியில் இந்த மாநாடு நடந்தது. அதில் பேசிய பிரதமர், “நமது நாட்டின் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்க்கை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளும் அதிகாரத்தை அவர்கள் பெறுவதற்கு நாம் உதவ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் சுய மரியாதை காப்பாற்றப்பட வேண்டும், அவர்களும் மற்ற மக்களைப் போல் சம உரிமை கொண்ட குடிமக்களாக, தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை பெற்றவர்களாக வாழ நாம் அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.பல நூற்றாண்டுகளாக வனத்திலும் காடுகளிலும் வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு உரிமை அளிக்கும் சட்டத்தை (Forest Rights act) முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், அவர்கள் தங்கள் பூர்வீக நிலத்தில் நிலைத்து வாழ ஏதுவாக அந்த நிலங்களை அவர்களின் பேரில் பதிவு செய்து அளித்திட வேண்டும் என்றார். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அவர்கள் பகுதிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தி, அவர்களைக் கொண்டே உருவாகும் உள்ளாட்சி அமைப்பின் மூலம் அரசின் திட்டங்கள் அவர்களின் பகுதியில் முழுமையாக நடைமுறைப்படுத்த உதவ வேண்டும் என்று கூறினார்.
இத்தோடு பிரதமர் நிறுத்திக்கொள்ளவில்லை, நமது நாட்டின் குற்றவியல் சட்டங்களைக் கொண்டு அந்த மக்கள் எவ்வாறெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் எடுத்துக் கூறினார். “தங்களின் பாரம்பரிய உரிமைகளை சற்றும் அங்கீகரிக்காத, இதற்கு முன் இருந்து வனச் சட்டத்தின் காரணமாக, அந்த மக்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (இரண்டு இலட்சம் வழக்குகள் என்று கூறினார்). நமது குற்ற நீதி அமைப்பின் வலிமையான கரங்கள், அவர்களை சுரண்டவும், துன்புறுத்தவும் பயன்படுத்தப்பட்டன” என்று பிரதமர் பேசினார். இந்த இடத்தைத்தான் கவனிக்க வேண்டும். நமது நாட்டின் சட்டங்களும், நீதித் துறையுமே, அவர்களுக்கு எதிரான சுரண்டலிற்கும் துன்புறுத்திலிற்கும் காரணமாக கையாளப்பட்டன என்று இந்த நாட்டின் பிரதமர் கூறுகிறாரே, இதுதான் நாம் அறிந்தவரை வாச்சாத்தியிலும், நாம் அறியாமல் எத்தனையோ வனப் பகுதிகளிலும் நடந்துள்ளது, நடந்தும் வருகின்றது. வன வளங்களை திருடியும், கடத்திச் சென்றும் பயன் பெற்ற ஆட்சி - அதிகார - அடியாள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, அந்தப் பழியை அப்பாவி மக்கள் மீது சுமத்தி, அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்து, ஆண்டுக் கணக்கில் சிறையில் வைக்கும் நிகழ்வுகள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளம்! இன்று கூட வாச்சாத்தி கொடுஞ்செயலின் முதல் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பவர் வன அதிகாரியான (ரேஞ்சர்) ஹரி கிருஷணன்தானே. இவர் மட்டுமல்ல, இவரோடு சேர்த்து மொத்தம் 4 ரேஞ்சர்கள் முதன்மை குற்றவாளிகள்! இவர்கள் யாவரும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதி, இந்திய வன சேவைக்கு (Indian Forest Service - IFS) வந்தவர்கள்! இவர்கள் தலைமையில்தான் வாச்சாத்தி கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது! தமிழ்நாட்டைப் போல் ஓரளவிற்கு வெளிப்படையாக விவரங்கள் வெளிவரும் மாநிலத்திலேயே இப்படியென்றால், தண்டகாரண்யம் போன்ற வனப் பகுதிகளில் இப்படிப்பட்ட கும்பல்கள் எந்த அளவிற்கு வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தும் என்று அனுமானிக்க வேண்டும். காட்டில் காய்ந்து விழுந்த குச்சிகளையும், முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களையும் சேகரித்துக் கட்டித் தலையில் சுமந்துச் செல்லும் பழங்குடியின, வனவாசிகள் பல இலட்சக்கணக்கில் வழக்கில் சேர்க்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். எதற்காக? இந்த படித்தவர்கள் அடிக்கும் கொள்ளையை மறைப்பதற்காக! இதுதான் கொடுமையானது. இக்கொடுமைதான் தொடருகிறது.இதற்கு முடிவு கட்ட வேண்டுமெனில், கட்சி அரசியல் கலக்காத உள்ளாட்சி அமைப்புகளை பழங்குடியின மக்கள் உருவாக்க பொது நல அமைப்புகள் (அரசுகள் செய்யாதது, ஏனெனில் அவைகள் கட்சி அரசியல் சார்ந்தவை) உதவிட வேண்டும். அவர்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்களைக் கொண்டு, அவர்கள் தங்கள் பகுதிகளை நிர்வகித்துக் கொள்வதற்கும், தங்கள் பகுதியில் உள்ள வளங்களை தாங்களே கையாளவும் முழுமையான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் அது உள்ளது, ஆனால் நடைமுறையில் வரவில்லை, காரணம், கட்சி அரசியல். பழங்குடியின, வனவாசிகள் வாழும் இடங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும், கட்சி அரசியலைக் கடந்த உள்ளாட்சி அமைப்புகள் ஏற்பட வேண்டும். மக்கள் துணிந்து நின்று அதனைச் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான், அவர்கள் தங்களையும் காத்துக்கொண்டு, தங்களுடைய வாழ்விற்கு ஆதாரமாகவுள்ள நிலங்களையும், நிலத்தடி வளங்களையும், நீர்வளத்தையும், ஆற்றையும், ஆற்று மணலையும், சுற்றுச் சூழலையும், தொன்று தொட்டு இருந்துவரும் விதைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். இதனைச் செய்ய மக்கள் முன்வரவில்லையெனில் வாச்சாத்திகள் தொடரும், நமக்குத் தெரியாமலேயே.