Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாலணா காசு காணாமல் போகிறது!

Advertiesment
கால் ரூபாய்
, புதன், 2 பிப்ரவரி 2011 (21:04 IST)
PIB
கால் ரூபாய் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு, பின் நாலணா என்றாகி பல பத்தாண்டுகள் புழக்கத்தில் இருந்த கிராமப் பணமான 25 காசு நாணயம் வரும் ஜூன் மாதம் இந்திய பொருளாதாரத்தில் இருந்து ஓய்வு பெறுகிறது.

25 காசு நாணயத்தை வரும் ஜூன் மாதம் வரை ஏற்றுக்கொள்ளுமாறு வங்கிகளையும் தனியார் நிதியமைப்புகளையும் இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) கேட்டுக்கொண்டுள்ளது.

25 பைசா நாணயமும், அதற்கும் குறைவான காசுகளும் ஜூன் மாதத்துடன் பயனில் இருந்து நீக்கப்படுகின்றன. நமது நாட்டில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒரு மிட்டாய் வாங்குவதற்குக் கூட போதுமானதாக இல்லாத நாணயமாக 25 பைசா ஆகிவிட்டது. இந்த நிலையில் இதற்கு மேலும் அதனை பயன்பாட்டில் வைத்திருப்பதில் பொருளில்லை என்று மைய வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, 50 காசிற்கு குறைவான சில்லரையை சிறு வணிகர்களும் அளிக்க மறுத்துவிடுவதாலும் (50 காசுக்கும் இதே நிலைதான்...தமிழ்நாட்டுப் பேருந்தில்), 25 காசு நாணயம் அடிக்க ஆகும் உலோக செலவு அதன் மதிப்பை விட அதிகம் ஆகிவிட்டதாலும், அதனை நிறுத்திவிட மைய வங்கி அறிவிப்பு வெளியிட்டுவிட்டது.

பெருமையாக இருந்த கால் ரூபாய் பணம்

நான் இளைஞனாக இருந்த காலத்தில் கால் ரூவா பணம் என்பது உழைப்பாளியின் ஒரு நாள் ஊதியம்” என்று பேசத் தொடங்கினார் பிரபல ஓவியர் சந்தானம்.

webdunia
FILE
இந்தியா விடுதலை பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் பிறந்தவர். “வளம் கொழிக்கும் தஞ்சை மண்ணில் பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் பிறந்த எனக்கு ஒரு அணா என்பது பெரிய விடயம்” என்ற சந்தானத்திடம், அப்போது உங்கள கையில் நாலணா இருந்தால் என்ன வாங்கியிருப்பீர்கள் என்று கேட்டேன்.

“ஏ யப்பா, எல்லாத்தையும் வாங்கிடலாம... ஏன்யா நாலணா என்றால் அது எவ்வளவு பெரிய பணம்? அன்றைக்கு யாரும் ஒத்த ரூவா நேரா பார்க்காத நேரம். நாலு கால் ரூவா சேர்த்தால் ஒரு ரூவா என்று கணக்குப் போட்டு சேர்த்துக் கொண்டிருந்த காலம்” என்றவர், காலணாவிற்கு மதிப்பிருந்த காலம் அது, நாலணாவிற்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா? என்று வினவினார். சிரித்துவிட்டேன்.

“என்ன சிரிக்கிற...இரண்டு அணா (12 காசு) இருந்தா ஒரு சேர் ஆட்டுக் கறி வாங்கலாம், இல்லையனா ஒரு தூக்கு புளி வாங்கலாம” என்றவர், அது நாணயத்திற்கு நாணயமான மதிப்பு இருந்த காலமஎன்றார்.

“அப்பவெல்லாம் எவ்வளவு (திருமணத்திற்கு) மொய் எழுதுவார்கள் தெரியுமா? எட்டணா எழுதினால் பெரிய விடயமய்யா. இன்றைக்கு நீங்கள் பார்க்கிற நாலணாவை விட நாங்கள் அன்று பார்த்த காலணா மிக மிகப் பெரியது”

webdunia
FILE
“அந்தப் பணத்தின் மீது கால் ரூபாய் என்று எழுதியிருக்கும். அதுவும் தமிழில்... இன்றைக்கு காசில் தமிழ் பெயர் இல்லை. பைசா வந்தது... தமிழ் போனது. அத்தோடு தமிழன் தலையிலும் மண் விழுந்தது” என்று ஆதங்கத்தோடு பேசியவர், “வெள்ளையன் தமிழ் மொழிக்கு மதிப்பளித்தான்” என்றார்.

“எங்க காலத்து இளமையில நாங்க எங்கய்யா பச்சை நோட்டைப் பார்த்தோம” என்று சொன்னவர், “ஒரு நாள் பார்த்தேன்... அந்த பச்சை நோட்டை. கோயிலில் இருந்து வெளியே வந்த போது கிடந்தது. எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று என் அப்பாவிடம் கொடுத்தேன். அத வாங்கிப் பார்த்த அப்பா, இன்னையிலேர்ந்து நம்ம பஞ்சமெல்லாம் பறந்து போச்சுடா மவனே-ன்னு சொன்னார். அதை எடுத்துக்கிட்டுப் போய் ஊர்ல இருந்த படிச்சவன் ஒருத்தன் கிட்ட கொடுக்க, அது பர்மா நோட்டு அப்படின்னான். அத்தோடு நிறுத்திக்கலே... இது ஒரு பைசாவுக்கு ஆகாது என்று சொல்லிட்டான். எங்க சந்தோஷம் ஒரு இரவு கூட நீடிக்கல” என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்.

இப்படி நாலணா காலம் இந்த நாட்டில் இன்றும் வாழும் பெரியவர்களுக்கு ஒரு கனாக் காலம் தான். அந்த நாலாணா பொற்காலத்திற்கு இன்னும் 5 மாதத்தில் முடிவு எழுதப்படுகிறது.

ஆனால், வேறொரு நாணயம் விரைவில் பிறக்கப்போகிறது. அது 10 ரூபாய் நாணயம்! இதற்கு எத்தனை ஆண்டு ஆயுளோ... விலையேற்றும் வியாபாரிகளுக்கே வெளிச்சம்.

Share this Story:

Follow Webdunia tamil