முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் பெயர்போனவர்.
அப்படியான ஒரு நபர் தனது தாயார் பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த எமர்ஜென்சியின்போது (அவசர நிலை) கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் தலையிட்டு சர்வாதிகாரி போல நடந்துகொண்டதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தது உண்டு.
இந்நிலையில், சஞ்சய் அப்படி நடந்துகொண்டது உண்மைதான் என தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி!
மேலும் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் குறித்த சில விமர்சனங்களையும் அது முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, கட்சியை சுய ஆய்வுக்கு உட்படுத்தி "The Congress And The Making Of The Indian Nation" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அது வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி இந்த புத்தகத்தின் ஆசிரியராக இருந்து, அதனை வெளிக் கொணர்ந்துள்ளார்.
இப்புத்தகத்தை நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் வெளியிட்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ஷகில் அகமத், சஞ்சய் காந்தியை பற்றி கூறப்பட்டவையெல்லாமே வரலாறாக இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அதே சமயம் அவரை இழிவுபடுத்தும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் இப்புத்தகத்தின் முக்கிய அம்சமாக இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்து நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியிடம் ஆட்சியிலும், கட்சியிலும் எல்லையில்லா அதிகாரம் குவிந்துகிடந்தது உண்மைதான் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று சஞ்சய் காந்தியும் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தும்போது "தன்னிச்சை மற்றும் எதேச்சதிகார" முறையில் நடந்துகொண்டது உண்மைதான் என்றும் அப்புத்தகத்தில் காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
" வழக்கமான அரசியல் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் முடங்கியதையும், பத்திரிகை தணிக்கை அமலாக்கத்தையும் எமர்ஜென்சி காலம் கண்டது. நீதித் துறையின் அதிகாரங்கள் கடுமையாக குறைக்கப்பட்டன" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சஞ்சய் காந்தி அந்த சமயத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவெடுத்ததாகவும், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மிக வேகமாக கொண்டுசெல்ல அப்போதைய இந்திரா அரசு மேற்கொண்ட முயற்சிக்கு அவர் அளித்த ஆதரவே அதற்கு காரணமாக அமைந்ததாகவும் அப்புத்தகம் குறிப்பிடுகிறது.
" மேலும் குடிசை ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எழுத்தறிவை பரப்புவது ஆகியவற்றையும் அவர் ஊக்கப்படுத்தினார். ஆனால் தன்னிச்சையான மற்றும் எதேச்சதிகார முறையில் அவர் அதனை நடைமுறைப்படுத்த முற்பட்டதால், பொதுமக்களிடையே அது கோபத்தை ஏற்படுத்தியது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றியும் குறிப்பிடும் அப்புத்தகம், "முழு புரட்சிக்கு" அவர் அழைப்பு விடுத்ததுதான் எமர்ஜென்சி அமலாக காரணமாக அமைந்தது என்றும், அதே சமயம் அவரது நேர்மை மற்றும் சுயநலமின்மை குறித்து "தவறாக கூற முடியாது" என்றும் தெரிவிக்கிறது.ஆனால் ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் " அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட மற்றும் ஜனநாயகமற்றதாக" இருந்ததாகவும் அப்புத்தகம் கூறுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களும் அதில் இடம்பெற்றுள்ளது.கட்சியிலும், ஆட்சியிலும் தமது குழுவை அவர் அடிக்கடி மாற்றியமைத்ததாகவும், கட்சியை சீரமைக்கப்போவதாக அளித்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் அப்புத்தகத்தில் குற்றம் சாற்றப்பட்டுள்ளது.
மேலும் மறைந்துவிட்டபோதிலும் போபால் விஷ வாயு கசிவு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சமீப காலம் வரை விமர்சிக்கப்படும் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவை, இப்புத்தகத்தில் காங்கிரஸ் பாராட்டியுள்ளது.
"நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் ஐந்தாண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்தார் என்றால் அது நரசிம்ம ராவ் தான்" என்றும் அதில் புகழாரம் சூட்டப்பட்டுளது.
அவரது ஆட்சி காலத்தில்தான் பொருளாதார சீர் திருத்தங்கள் வேகமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது அப்புத்தகம்!