குடும்ப சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பத்திரிக்கை தர்மம்!
, செவ்வாய், 5 மே 2009 (13:55 IST)
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் அங்கு நிலவும் அடிப்படை உரிமைகளின் - குறிப்பாக கருத்துச் சுதந்திரத்தின் அடையாளமாக பத்திரிக்கைகளே திகழும். என்னதான் தாங்கள் சார்ந்த நாட்டின் நலனை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு தாளமிட்டு ஆடினாலும் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதையோ அல்லது கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுவதையோ அல்லது மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசோ அல்லது அதன் நிர்வாக அமைப்புகளோ சிதைக்க பத்திரிக்கைகள் அனுமதிப்பதில்லை.அது மட்டுமல்ல, ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார போக்குகளை, அதன் குறைகளை ஆழமாக சுட்டிக்காட்டி அதற்கு காரணமாக அரசியல்வாதிகளை, அரசை சாடுவதிலும் பத்திரிக்கைகள் எப்போதும் முன் நிற்கின்றன.
‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா’ என்று 1971 இந்திய - பாகிஸ்தான் போருக்குப் பிறகு நமது நாட்டின் பிரதமராக இருந்த தலைவரை அவருடைய கட்சி தூக்கி நிறுத்தி மக்களை பிரமிப்பில் ஆழ்த்த முற்பட்டபோது அதனை நிராகரித்தன அன்றைய இந்தியாவின் பத்திரிக்கைகள். இன்றுள்ளதுபோல் அன்று தொலைகாட்சிகள் இல்லை. வானொலி அரசு சார்பு நிறுவனமாக இருந்தது. பத்திரிக்கைகள் மட்டுமே தங்களின் தர்மம் தவறாமல் நின்றன. அதனால்தான், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு தனக்கு எதிராக வந்தவுடன், தனது பதவிக்கு வந்த சோதனையை நாட்டிற்கு வந்த சோதனையாக கூறி இந்திரா காந்தி என்ற அந்த அசுர மக்கள் செல்வாக்குப் பெற்றத் தலைவர் நாட்டின் அவசர நிலையை பிரகடனம் செய்து அடிப்படை உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதித்தும், பத்திரிக்கைகள் மீது கடுமையான தணிக்கையை நடைமுறைபடுத்திய போதும் சற்றும் அசராமல் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றன பத்திரிக்கைகள். அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து ஜனநாயக இயக்கம் கண்ட ஜெயப் பிரகாஷ் நாராயணன், அதனை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றார். அவர் விடுத்த செய்தியை மக்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தன பத்திரிக்கைகள். கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அந்த மாபெரும் தர்ம யுத்தத்தில் முன்னணியில் நின்றது. அதன் விளைவாக ஒன்றரை ஆண்டுக் காலம் இந்த நாடு சர்வாதிகார இருளில் முழ்கடிக்கப்பட்டபோதும் பத்திரிக்கைகள் அதில் ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றாய் பிரகாசித்தன. எமர்ஜன்சி முடிவிற்கு வந்த 1977இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சி வட இந்திய மாநிலங்களில் ஒரு இடம் கூட ஜெயிக்க முடியாமல் துடைத்தெறியப்பட்டது. ஜெயப்பிரகாசர் உருவாக்கிய ஜனதா கட்சி 287 இடங்களில் வென்றது. மொரார்ஜி தேசாய் தலைமையில் காங்கிரஸிற்கு மாற்று ஆட்சி அமைந்தது. அந்த சீரிய முயற்சி மிகக் குறுகிய காலத்திலேயே தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் அதுவே காங்கிரஸிற்கு எதிரான மாற்றுச் சக்திகளை நமது நாட்டின் பல மாநிலங்களில் உருவாக்கியது.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு 1984இல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 405 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றார். ஆனாலும் பத்திரிக்கைகள் தங்கள் நிதானத்தை இழந்துவிடவில்லை. அவருக்கோ அல்லது அவர் சார்ந்த கட்சிக்கோ தடம் மாறி தாளம் போடவில்லை.
அதனால்தான் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் ஒரு சிறு துளியாய் தெரித்து விழுந்தபோது - அதுவும் அந்நிய நாடு ஒன்றில் - அதனை அப்படியே கவ்வி ஒரு மாபெரும் ஊழலை நாட்டிற்கு அடையாளம் காட்டின இந்தியாவின் பத்திரிக்கைகள். அதன் விளைவாக அசுர பலத்துடன் வென்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அடுத்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்தியாவின் ஜனநாயக் தூணை தாங்கி நின்ற பத்திரிக்கைகள் தங்கள் கடமையை சரிவர செய்தன. நாடு ஊழலற்ற பாதைக்குத் திரும்பியது. இந்த (இந்திய) நாட்டின் நாயகர்கள் மக்களே என்பது நிரூபனமானது.
இப்படி தன்னிரகற்று ஜனநாயக தொண்டாற்றிய இந்திய பத்திரிக்கை உலகம் இன்று - இன்றைய வணிக நோக்குடன் கூடிய ‘உலகளாவிய ஊடகப் பாதை’யில் - தள்ளாட ஆரம்பித்துள்ளது வருத்தமான நிலையாகும்.அன்று இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தில் துணிச்சல் மிக்கத் தலைவராக திகழ்ந்த இந்திரா காந்தியை அவர்தான் இந்தியா என்று முன்வைக்கப்பட்ட முழக்கத்தை ஏற்க மறுத்து அவருடைய வீழ்ச்சிக்கு வித்திட்ட இந்தியப் பத்திரிக்கைகள் இன்று சோனியா காந்தியின் மகன் என்ற ஒரே ‘அந்தஸ்து’ மட்டுமே பெற்ற அவருடைய மகன் ராகுல் காந்தியை அடுத்த ‘பிரதமராக தகுதி பெற்ற ஒரே இந்தியராக’ தூக்கி நிறுத்தப் பாடுபடுவது வெட்கித் தலை குனியக் கூடிய வேதனையாகும்.
இதில் முன்னிற்பவை ஆங்கில தொலைக்காட்சிகளே. அவர் எங்கு சென்றாலும் அதனை படம் பிடித்துக் காட்டுவதும், அவர் எது பேசினாலும் அதில் ஆழமான அர்த்தம் உள்ளதுபோல் அழுத்தி செய்தி கூறுவதும், அவரது ஒவ்வொரு அசைவும் இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் கவனிக்கத்தக்கது என்பது போல காட்டுவதும் எந்தவிதமான தர்மம் என்று புரியவில்லை.
எல்லா நாளிதழ்களும் அவர் பேசியதை பதிவு செய்கின்றன. அவர் பேசியது என்ன என்று அறிய இந்திய மக்கள் அப்படியா துடிக்கிறார்கள்? இந்தியாவின் இளைய சமூதாயத்தின் வழிகாட்டியாக எப்போது அவர் மாறினார். எதனால் இப்படிப்பட்ட ஒரு முயற்சி... அதுவும் விமர்சனம் செய்யக் கூட ஏதுமற்ற பேச்சு பேசும் ஒருவரை ‘நாளைய தலைவராக’ ஆக்க ஏனிந்த பாகீரதப் பிரயர்த்தனம்? அப்படி என்ன தலைவர் ஒருவரைத் தேடி இந்தியா ஏங்கிக் கொண்டிருக்கிறது? எதற்குமே பதில் தெரியவில்லை. நமது நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க அப்படி என்ன தீ்ர்வைத் தந்தார் ராகுல்? நாள் முழுவதும் அவரின் அசைவை, பேச்சை கவனிக்கக் கூடிய அளவிற்கு அவர் பேசியதுதான் என்ன? ஒன்றுமே புரியவில்லை.
ராகுல் காந்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதிக்குப் பாதி அவருடைய சகோதரியான பிரியங்கா வதேராவிற்கும் இந்த ஊடகங்கள் வழங்குகின்றன. அதுவும் ஏனென்று புரியவில்லை.
காங்கிரஸ் கட்சியே நேரு, இந்திரா, ராஜீவ் பெருமைகளிலும், அந்தக் குடும்பத்தின் மீதான பற்றுதலிலும்தான் சுழன்றுகொண்டிருக்கிறது என்பது இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையை இன்றைய ஊடகங்கள் ஏன் ஏற்றுக் கொண்டன என்றுதான் புரியவில்லை. காங்கிரஸில், அதன் மாநிலத் தலைமைகளில் எத்தனையோ குடும்பங்களின் குட்டி சாம்ராஜ்யங்கள் அடங்கியுள்ளன. அவைகளுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பது ஊடகவியலாளர்களுக்குத் தெரிந்ததுதான்.
அதனை சற்றும் புரிந்துகொள்ளாமல் தங்களின் பாரம்பரிய ‘ஜனநாயக அரசியலை’ காங்கிரஸ் கட்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த குடும்ப சாம்ராஜ்ய வாழ்த்து முழக்கத்தில் இப்போது பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும் இணைந்துள்ளதுதான் துரதிருஷ்டமாகும்.
மக்களின் பிரச்சனைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய பத்திரிக்கைகள் இன்று அரசியலிற்கு வரும் செல்வாக்கு மிக்க குடும்ப அரசியல்வாதிகளின் வால் பிடித்து செய்தி போட்டுக் கொண்டிருப்பது ஜனநாயக அவலம்.
மக்களின் நலனே ஜனநாயகத்தின் இலக்கு. அரசு, அரசாங்கம், அரசியல் ஆகியவற்றின் செயல்பாடுகளை அவர்களிடம் ஆழமாக கொண்டு செல்வதே கருத்துச் சுதந்திரத்தின் அடையாளம்.
அநதப் பாதை தடம் புரள்கிறதோ?
தங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை இன்றைய ஊடகங்கள் தவறாக புரிந்து கொள்கின்றனவோ? இது இந்தியா கவலைப்பட வேண்டிய நிலை.