நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி வீழ்த்திய நிலையில் ஆட்ட நாயகன் விருதிலும் சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
ஐபிஎல் லீக் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. சீசன் தொடங்கி இதுவரை ஒரு வெற்றிக் கூட பெறாத இரு அணிகளும் மோதிக் கொண்டதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 172 ரன்களை பெற்றிருந்தது. சேஸிங்கில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்து தனது முதல் வெற்றியை கைப்பற்றியது. டெல்லி அணிக்கு இது நான்காவது தோல்வி.
மும்பை அணிக்காக 45 பந்துகளில் 65 ரன்களை குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை நடந்துள்ள ஐபிஎல் சீசன்களில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்ற இந்திய வீரராக இதன்மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா. 19 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார் ரோஹித் சர்மா. 17 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கடந்த 2 லீக் போட்டிகளிலும் ரோஹித்தின் பேட்டிங் மோசமாக இருந்த நிலையில் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கியிருந்தனர். அவர் பீல்ட் அவுட் ஆகிவிட்டதாக கூட பேச்சு எழுந்தது. ஆனால் அவற்றை தாண்டி சிறப்பாக விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.