அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி செய்ய முயன்ற காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் அரபு அமீரகத்தில் பலத்த பாதுகாப்புகளுடன் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்தபோது ப்ருத்வி ஷா அடித்த பந்தை ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தடுத்தார்.
தற்போது கொரோனா காரணமாக பந்தில் எச்சில் துப்பி பாலிஷ் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. கொரோனா ரூல்ஸை மறந்த கோலி பந்தில் எச்சிலை துப்ப முயன்றார். அதை பார்த்து சக வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். திடீரென ரூல்ஸ் நினைவுக்கு வந்து உஷாரான கோலி கடைசி நேரத்தில் எச்சில் துப்பாமல் நிறுத்தினார். பிறகு ச்க வீரர்களை பார்த்து குறும்புத்தனமான சிரிப்பு சிரித்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் “ப்ருத்வி ஷா அருமையான ஆட்டத்தை ஆடியுள்ளார். கிட்டத்தட்ட பந்தில் எச்சிலை பயன்படுத்த முயன்ற கோலி மில்லியன் டாலர் ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார். சில நேரங்களில் நம் உள்ளுணர்வுகளின்படி நாம் நடந்து கொள்கிறோம்” என கூறியுள்ளார்.
இதை வைத்து கோலியை சிலர் கிண்டலடித்து வரும் நிலையில் ஆர்சிபி ரசிகர்களோ “போன வாரம் ராஜஸ்தான் வீரர் உத்தப்பா பந்தில் எச்சிலை பயன்படுத்தியே விட்டார். ஆனால் கோலி கடைசி நேரத்தில் அதை தவிர்த்துக் கொண்டுள்ளார்” என கோலிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.