எப்படி இருக்கப்போகிறது ரயில்வே பட்ஜெட்? தமிழக நிலைமை சென்ற ஆண்டு போலவே அமையுமா?
எப்படி இருக்கப்போகிறது ரயில்வே பட்ஜெட்? தமிழக நிலைமை சென்ற ஆண்டு போலவே அமையுமா?
2014ல் மோடி அரசு பதவி ஏற்றவுடன் ரயில்வேக்கு நல்ல காலம் பிறக்கும் என்றும் பல பேர் எதிர்பார்த்தார்கள். 2015-16 பட்ஜெட்டை தாக்கல் செய்த சுரேஷ் பிரபு, 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு மூடுவிழா நடத்தினார்.
ஏனென்றால் திட்டக் கமிஷனை மத்திய அரசு கலைத்து விட்டது. இவர் புதிய ஐந்தாண்டு திட்டத்தை அறிவித்தார். 2015 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டுகளில் ரயில் வளர்ச்சிக்கு என தனது அரசு ரூ.8.56 லட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாகவும், எந்தெந்த வகையில் அந்தச் செலவு இருக்கும் என்றும் அவர் திட்டத்தை வெளியிட்டார்.
எனவே ஆண்டுக்கு ரூ. 1.71 லட்சம் கோடி முதலீடு நடக்கும் என்று நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அவரது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டான 2015-16க்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்தான் செலவு செய்யப் போவதாக அறிவித்தார்.
எடுத்தவுடனேயே திட்ட மதிப்பீட்டில் ரூ.71 ஆயிரம் கோடி வெட்டு. இந்த ஒரு லட்சம் கோடி எப்படி திரட்டப்படப்போகிறது என்று அவர் பட்ஜெட்டில் அறிவித்தார். மத்திய அரசின் பட்ஜெட் ஆதரவு ரூ.40,000 கோடி வரும். டீசல் மூலம் ரூ.1,645 கோடி வரும்.
கடன் பத்திரம் வெளியிட்டு ரூ.17,655 கோடி திரட்டப்படும். ரயில்வேயின் அக நிதியாக்கம் மூலம் ரூ.17,793 கோடி திரட்டப்படும். தனியார் பங்களிப்பு மூலம் ரூ.5,781 கோடிவரும். காப்பீடு, ஓய்வூதிய நிதி முதலிய வற்றிலிருந்து திரட்டும் கடன் மூலம்ரூ.17,136 கோடி திரட்ட முடியும் என்று திட்டத்தை அறிவித்தார்.
ஆனால் மத்திய அரசு தான் தரவேண்டிய ரூ.40,000 கோடிக்கு மாறாக, ரூ 28,000 கோடிதான் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டது. கடன் பத்திரம் மூலம் ரூ.17,655 கோடி இலக்கிற்கு பதிலாக திரட்டியது வெறும் ரூ. 6,000 கோடிதான். ஆக மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குப் போடப்பட்ட திட்டத்தில் ரூ.53,000 கோடிதான் திரட்ட முடிந்தது. 47,000 கோடியைத் திரட்ட முடிய வில்லை.
எனவே நடப்பு நிதி ஆண்டுக்கு திட்டமிட்ட முதலீட்டில் 53 சதவீதம்தான் செலவு செய்யப்படும். 47 சதவீதம் திட்டச்செலவு வெட்டப்பட்டிருக்கும். 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் டை பிப்ரவரி 25 அன்று படிக்கிறபோது இந்த உண்மையை அவர் ஏற்றுக் கொண்டிருப்பார் என்று நம்பலாம்.
ஐந்தாண்டுத் திட்ட மதிப்பீடு ரூ.8.56 லட்சம் கோடியாகும். ஆண்டுக்கு ரூ.1.71 லட்சம் கோடி செலவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு லட்சம் கோடிக்குத்தான் திட்டமே. அதிலும் 53 சதவீதம்தான் - ரூ.53,000 கோடிதான் - செலவு நடக்கும்.
தமிழகத்தில் புதிய தடங்களுக்கான திட்டங்களுக்கு பழைய மதிப்பீட்டின்படி ரூ.4,500 கோடி தேவை. நடப்பு நிதி ஆண்டில் ஒதுக்கியது வெறும் ரூ.23 கோடி மட்டுமே. அகலப் பாதை திட்டங்களுக்கு ரூ.2,800 கோடி தேவை. ஒதுக்கியதோ வெறும் 243 கோடி மட்டுமே. மதுரை - கன்னியாகுமரி திட்டம் உள்ளிட்ட இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கு ரூ.5,000 கோடி தேவை. ஒதுக்கியது என்னவோ வெறும் ரூ.443 கோடிதான்.
இவற்றின் கதி என்ன வாகும் என்று நீங்களே புரிந்து கொள்ளலாம். 2016-17ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கும் இதே கதிதான் ஏற்படும்.