Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று விரலில் கம்பு சுத்தி வியப்பூட்டும் 7 வயது சிறுமி யாஷிகா

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (13:24 IST)
பிறக்கும்போதே ஒவ்வொரு கைகளிலும் 3 விரல்கள் தான், ஆனால் அந்த விரல்களும் பொருளை எடுக்கும் அளவில் பிடிமானமாய் இல்லை. இந்த குறைபாட்டை சிகிச்சையால் குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கைவிட்ட போதும், சிறுமியின் பெற்றோர் கொடுத்த ஊக்கமும், உத்வேகமும் குழந்தைக்கு நம்பிக்கையுடன் பலத்தை சேர்த்து சாதிக்க வைத்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த வீரராகவன்- கோமதி தம்பதியரின் மகள் யாஷிகா. 7 வயதுடைய யாஷிகா 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி பிறக்கும்போதே கை மற்றும் கால்களில் குறைபாடு இருந்துள்ளது.

சிறுமியின் கைகள் பிறரை போன்று இல்லாமல், ஒவ்வொரு கைகளிலும் 3 விரல்கள் மட்டுமே இருந்தன. இதை மருத்துவச் சிகிச்சை மூலம் சரி செய்ய சிறுமியின் பெற்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் குழந்தையின் கைகளில் இருக்கும் குறைபாடு காரணமாக எந்த ஒரு பொருளையும் பிடிப்பது, தூக்குவது, எழுதுவது மிகக் கடினமானதாக இருந்தது. இதனால் குழந்தையின் விரல்களுக்கு பலம் சேர்ந்தால் மட்டுமே அவரால் பிறரைப் போல கை விரல்களை சகஜமாக உபயோகிக்க முடியும் என்பதை யாஷிகாவின் பெற்றோர் உணர்ந்தனர்.

ஆகவே இவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்குச் சிலம்பம் கற்பிக்கும் ஆசிரியர் சதீஷ்குமார் என்பவரிடம் சிலம்பம் பயிற்சிக்காக யாஷிகாவை அனுப்பினர்.

யாஷிகாவின் கை விரல்கள் இருக்கின்ற சூழலில் அவர் சிலம்பம் கற்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. ஆனால் சிலம்ப ஆசிரியரின் தீவிர பயிற்சியாலும் குழந்தை யாஷிகாவின் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்பால் சிலம்பம் கலையைக் கற்றார்.

இதன் மூலமாக பிறர் செய்யும் அனைத்து காரியங்களையும் குழந்தை யாஷிகாவும் செய்யும் அளவிற்கு கை விரல்களில் பலம் சேர்ந்தது. தற்போது அவரால் அனைத்து பொருளையும் எடுப்பதும், தூக்குவதும், பள்ளி பாடங்களை எழுதுவதும் சுலபமாக மாறியுள்ளது.

"எங்களது மகளுக்கு பிறப்பிலேயே ஒவ்வொரு கைகளிலும் மூன்று விரல்கள் மட்டுமே இருந்தது.இதனால் அவளால் கைகள் மூலமாக எந்தவொரு வேலையும் செய்யமுடியாத நிலையில் இருந்தாள். வீட்டில் இருந்தபடியே குழந்தைக்குப் பயிற்சி அளிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பின்னர், சிலம்பம் வகுப்பில் சேர்ந்து விட்டால், கை விரல்களை சகஜமாக பயன்படுத்த முடியுமென்ற நம்பிக்கையில் சிலம்பம் வகுப்பில் சேர்த்துவிட்டோம்" என்கிறார் யாஷிகாவின் தந்தை வீரராகவன்.

முதல் முதலில் யாஷிகாவின் பெற்றோர் அவரை அழைத்து வந்து சிலம்பம் பயிற்சி அளிக்கமுடியுமா? என கேட்டனர். ஆனால் அந்த குழந்தையின் ஒவ்வொரு கைகளிலும் மூன்று விரல்கள் என மொத்தமாக 6 விரல்கள் மட்டுமே இருந்தது. அதைப்பார்த்ததும் எப்படி இந்த குழந்தைக்கு பயிற்சியளிப்பது என்று அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருந்ததாக கூறுகிறார் சிலம்பம் ஆசிரியர் சதீஷ்குமார்.

"குறிப்பாக சிலம்பம் விளையாட்டுக்கு தேவையானது கை, கால்கள் தான். அதுமட்டுமில்லாமல், கை விரல்கள் மிகவும் முக்கியமானது. அப்போதுதான் சிலம்பத்தை பிடித்து முழுமையாக விளையாட முடியும். தற்காப்பு கலைக்கு நம்முடைய விரல்கள் பலமாக இருந்தால் மட்டுமே அந்த கலையை முழுமையாக செய்யவும் முடியும்.

இந்த சூழலில் விரல்கள் சரியாக இல்லாதபோது இந்த குழந்தைக்கு பயிற்சி அளிக்கலாமா? என்ற தயக்கமும் இருந்தது. அதை குழந்தையின் பெற்றோரிடத்திலும் எடுத்துரைத்தேன். ஆனால் அதை ஏற்க மறுத்த குழந்தையின் பெற்றோர் முகம் சற்று வாட்டியது. அதை பார்த்ததும் எனக்கும் மனவேதனையாக இருந்தது.

பின்னர் இந்த குழந்தைக்கு சிலம்பம் கலையை கற்பிக்க வேண்டும் என இதை ஒரு சவாலாக ஏற்று செய்யலாம் என முடிவெடுத்தேன். எங்களுடைய ஆசான்கள் கஷ்டப்பட்டு தான் இந்த கலையை கற்று கொடுத்தனர். அதைப்போன்று நானும் இதை யாஷிகாவிற்கு கற்பிக்கலாம் என்று எண்ணி பயிற்சி கொடுக்க தொடங்கினேன்," என்றார் சிலம்பம் கலை ஆசிரியர்.

"யாஷிகாவிற்கு ஆரம்ப காலத்தில், சிலம்பம் கம்பை ஒரு கையால் சுத்தமாக பிடிக்க முடியாது. நம்முடைய இரு விரல்களால் அதை பிடுங்கி விடலாம். மற்றொரு கையில் 20 சதவீதம் மட்டுமே பலம் இருந்தது. அதுவும் சரியாக பிடிபடாமல் கம்பு விழுந்துவிடும்.

ஆகவே, ஒவ்வொரு கைகளுக்கும் தனித்தனியே மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பயிற்சி கொடுத்தேன். படிப்படியாக கை விரல்களில் கம்பை பிடிப்பதில் நல்ல பிடிமானம் கிடைத்தது. நாளடைவில் சிலம்பம் கலையில் எல்லாவற்றையும் சாதுரியமாக செய்ய தொடங்கினாள் யாஷிகா.

இதைப்பார்த்ததும் எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது," என்கிறார் சிலம்ப ஆசிரியர் சதீஷ்குமார்.

குழந்தையின் ஈடுபாட்டால் சிலம்பம் கலையில் இருக்கும் அனைத்தையும் சொல்லிக்கொடுத்து வளர்த்துவிட வேண்டும் என அதிக கவனம் செலுத்தியதாக சிலம்பம் கலை ஆசிரியர் கூறுகிறார்.

"யாஷிகாவின் கைகளில் என்னென்ன ஆயுதங்களை பிடிக்க முடியுமோ அதையெல்லாம் பயிற்சியளித்தோம். இப்போது அனைத்தையும் கற்று நல்ல முறையில் இந்த கலையை விளையாடி வருகிறார். விரல்கள் இருக்கக்கூடிய பிள்ளைகளால் செய்ய முடியாத விஷங்களை யாஷிகா சாதுர்யமாக செய்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த குழந்தை சிலம்பம் சுற்றுவதை அனைவருமே ஆவலுடன் கண்டு ரசிப்பார்கள்," எனத் தெரிவிக்கிறார் சதீஷ்குமார்.

இந்த சிலம்பம் கலை எனக்கு மிகவும் பிடித்த ஒன்றென கூறும் சிறுமி யாஷிகா அண்மையில் சர்வதேச சிலம்பம் சம்மேளனம் நடத்திய ஆன்லைன் சிலம்பம் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றுள்ளதாக கூறுகிறார் அவர்.

வெளியே எங்கு சென்றாலும் அனைவரும் கேட்கக்கூடிய ஒரே விஷயம் குழந்தைக்கு என்ன ஆனது? ஏன் இப்படி இருக்கிறது? என்ன செய்தீர்கள்? உள்ளிட்ட கேள்விகளால் மனதை துளைத்து மிகவும் வேதனையடைய செய்துள்ளதாக யாஷிகாவின் தாயார் கோமதி தெரிவித்தார்.

"இப்படி நம்மை கேட்பதுபோல, என் குழந்தையை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு ஏதாவதொரு விதத்தில் ஊக்கமளிக்க வேண்டும் என்பதை உணர்தேன். இதன்மூலமாக என் குழந்தையின் குறைபாட்டை காரணம்காட்டி அவளை யாரும் ஏளனமாக நினைத்துவிட கூடாது. தனது கை விரல்கள் இப்படி உள்ளதென அவளுக்கும் எந்த தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுவிடக்கூடாது. மேலும் இதற்காக எந்த விதத்திலும் அவள் மனம் உடைந்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.

அவளது கைகளுக்கும், விரல்களுக்கும் பலம் சேரும்படி சரியான பயிற்சியளித்தால் அவளால் பிறரைப்போல கைகளை உபயோகப்படுத்த முடியும் என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். பின்னர் எந்த விளையாட்டை அவளுக்கு கற்பித்தால் கைகளுக்கு பலம் சேர்க்கும் என்பதை நன்கு ஆராய்ந்து இறுதியாக சிலம்பம் கலையை தேர்வு செய்தோம்.

அதையடுத்து எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே சிலம்பம் கற்பிக்கும் ஆசிரியரிடம் பயிற்சிக்காக அனுப்பினோம். அதிலிருந்து அவள் அனைத்து வேலைகளையும் சகஜமாக செய்ய தொடங்கினாள், முன்பெல்லாம் அவளால் எழுத வராது, எழுத மிகவும் சிரமப்படுவாள். ஆனால், தற்போது பென் மற்றும் பென்சிலை பிடித்து அழகாக எழுதுகிறாள். அவளது கைகளுக்கு வலுச் சேர்ந்துள்ளது," என்று நெகிச்சியுடன் யாஷிகாவின் தாயார் கூறினார்.

உடல் குறைபாடாக பிறந்துவிட்டோம் என்பதற்காக முடங்கிவிடக்கூடாது என்று கூறும் கோமதி, அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை நன்கு ஆராய்ந்து, அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென தெரிவிக்கிறார் அவர்.

"நகர பகுதியில் இருக்கும் பெற்றோர் இதுபோன்ற விஷயங்களில் அவர்கள் குழந்தைகள் குறைபாட்டை சரி செய்ய அதிக கவனம் காட்டுகின்றனர். ஆனால் கிராம புறங்களில் குழந்தைகளுக்கு குறைபாடு இருந்தால் அதை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். நானும் கிராமத்தை சேர்ந்தவர் தான், ஆனால் என் குழந்தையின் பலத்தை கண்டறிந்து அவளை அதில் மெருகேற்றினேன். பிறர் என்ன சொல்வார்கள், நினைப்பார்கள் என்பதை கண்டுகொள்ளாமல் குழந்தை நலனை மட்டும் மனதில் வைத்து அவர்களுக்கு வேண்டியவற்றை செய்தால் நம் குழந்தை நலமாக இருப்பார்கள்,"என்று நம்பிக்கையுடன் சிறுமியின் தாயார் கோமதி தெரிவிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments