Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸாவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் விலகியது ஏன்? - விரிவான அலசல்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (21:20 IST)
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த ஜோர்டான் முன்வைத்த யோசனையை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை வெள்ளிக்கிழமை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
 
எனினும், இதுகுறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்துக்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
 
இந்தியாவை தவிர, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், எத்தியோப்பியா, ஜெர்மனி, கிரீஸ், இராக், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, துனீசியா, யுக்ரேன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை.
 
மியான்மர், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சீனா உட்பட இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளும் காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. பிரான்ஸும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளது.
 
இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த ஒரே பெரிய மற்றும் செல்வாக்குமிக்க நாடு அமெரிக்கா மட்டுமே.
 
இஸ்ரேலின் பழிவாங்கும் நடவடிக்கையை ஆதரிக்கும் பல ஐரோப்பிய நாடுகளும் இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
காஸாவிற்கு நிவாரணப் பொருட்கள் தடையில்லாமல் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்தத் தீர்மானம்.
 
அதேநேரம், ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க கனடா கொண்டு வந்த தீர்மானத்துக்குப் போதிய ஆதரவைப் பெற முடியவில்லை.
 
 
ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.
 
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று வர்ணித்த இந்தியா, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்’ இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. இந்தத் தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பதுடன் 200க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்.
 
சில நாட்களுக்குப் பிறகு, பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
 
பாலத்தீனர்களுக்கு சுதந்திரமான மற்றும் தன்னாட்சி பெற்ற பாலத்தீன கோரிக்கையை இந்தியா ஆதரிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.
 
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறும்போது, ​​“பாலத்தீன மக்களுக்கான இறையாண்மை கொண்ட சுதந்திர நாடான பாலத்தீனத்தை உருவாக்குவதற்கான நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது.
 
பாலத்தீனர்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய எல்லைகளைக் கொண்ட ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும், அந்நாட்டினர் இஸ்ரேலுடனும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு,” என்றார்.
 
காஸாவில் மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளதாகவும், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் தெரிவித்திருந்தார்.
 
பிரதமர் நரேந்திர மோதி கடந்த 2018ஆம் ஆண்டு பாலத்தீனத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
 
இஸ்ரேல்-பாலத்தீன பிரச்னையில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போது, இருதரப்பும் ஒன்றிணைந்து பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வரவேண்டும் என்றும், அதற்கு முழு ஆதரவையும் அளிப்பதாகவும்’ தெரிவித்தது.
 
ஐக்கிய நாடுகள் சபையில் பாலத்தீனர்களுக்கு இந்தியா அளிக்கும் ஆதரவு இந்த ஆண்டு ஏப்ரலில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. அந்தத் தீர்மானம் 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறுவதுடன் புதிய குடியேற்றங்களை நிறுவுவதையும் ஏற்கெனவே உள்ள குடியிருப்புகளை விரிவுபடுத்துவதையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிடம் வலியுறுத்தியது.
 
பாலத்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்தது. வரலாற்று ரீதியாக, இந்தியாவின் நிலைப்பாடு பாலத்தீனர்களுக்கு ஆதரவளிக்கும் விதத்திலேயே உள்ளது.
 
கடந்த 1974ஆம் ஆண்டில், பாலத்தீன மக்களின் ஒரே மற்றும் சட்டப்பூர்வமான பிரதிநிதியாக பாலத்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக இந்தியா ஆனது.
 
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 53வது அமர்வின் போது, ​​பாலத்தீனர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா இணை ஆதரவை வழங்கியது மட்டுமின்றி அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தது.
 
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தீர்மானத்தை 2003 அக்டோபரில் இந்தியாவும் ஆதரித்தது. இது இஸ்ரேலின் பிரிவினை சுவர் கட்டும் முடிவை எதிர்த்தது.
 
மே 2017இல், பாலத்தீனிய நிர்வாகத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
 
யுனெஸ்கோவில் பாலத்தீனம் முழு உறுப்பினராவதற்கு ஆதரவாக இந்தியா 2011ஆம் ஆண்டில் வாக்களித்தது.
 
அதற்கு அடுத்த ஆண்டில், ஐ.நா.வில் வாக்களிக்கும் உரிமையின்றி பாலத்தீனத்தை "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக" மாற்ற வேண்டும் என்ற ஐ.நா பொதுச் சபை தீர்மானத்திற்கு இந்தியா இணை ஆதரவை வழங்கியது.
 
ஐநா வளாகத்தில் பாலத்தீனக் கொடியை நிறுவ, 2015 செப்டம்பரில் இந்தியாவும் ஆதரவளித்தது.
 
பிப்ரவரி 2018இல், பாலத்தீன பகுதிகளுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோதி பெற்றார். அப்போது, ​​பாலத்தீன மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக பாலத்தீன நிர்வாகத் தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம் உறுதியளித்ததாக மோதி கூறியிருந்தார்.
 
‘பாலத்தீனப் பகுதி இறையாண்மை கொண்ட, அமைதியான சூழலில் வாழும் சுதந்திர நாடாக மாற வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது’ என்று மோதி கூறியிருந்தார்.
 
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் நுழைந்தது. காஸா மீது இஸ்ரேல் விமானப்படை பயங்கர குண்டுவீச்சு நடத்தி வருகிறது. காஸாவில் இணையம் மற்றும் தொலைத்தொடர்புகள் செயலிழந்துள்ளன. மேலும் அங்கு காணப்படும் அண்மைக்கால நிலைமை குறித்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தகவல்களே கிடைக்கின்றன.
 
பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபுலோஃப் இதுகுறித்துப் பேசுகையில், வடக்கு காஸாவில் குழப்பமான சூழல் நிலவுவதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குண்டுவெடிப்புகள் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். காஸாவில் இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமைக்குப் பிறகான புள்ளிவிவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
 
காஸாவில் எரிபொருளோ தண்ணீரோ கிடைப்பதில்லை. மருத்துவமனைகள் மோசமான நிலையில் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையால் ஐக்கிய நாடுகள் சபையும் நிவாரணங்களை அளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.
 
இந்தச் சூழ்நிலையில், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான ஐ.நா.வின் முன்மொழிவு முக்கியமானது ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படுவதில் சந்தேகம் உள்ளது.
 
 
வெள்ளிக்கிழமையன்று தரைவழித் தாக்குதலைத் தொடங்கியபோது காணப்பட்ட துயரக் காட்சிகளில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது.
 
ஒரு நிலையில் இருந்து பார்த்தால், இந்தியாவின் கொள்கை பாலத்தீனர்களுக்கு அனுதாபமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா இஸ்ரேலின் பக்கம் சாய்ந்து வருகிறது.
 
இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடந்து வரும் தற்போதைய மோதல் இந்தியாவுக்கு ஒரு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது.
 
இதுபோன்ற சூழ்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா விலகியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்து வருகிறது.
 
ராஜ்ஜீய ரீதியில் சமநிலையைப் பராமரிக்க இந்தியா முயல்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முடாசிர் கமர் கூறுகையில், “இந்தியா இஸ்ரேலுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளது என்பதுடன் பாலத்தீனர்களுக்கு உதவுவது குறித்தும் வெளிப்படையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. இப்போது இந்தியா மட்டும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று கூற முடியாது.
 
ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அரபு நாடுகளால் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதுகூட இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் சமநிலையைப் பராமரிக்க இந்தியா விரும்புகிறது,” என்றார்.
 
இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் விலகியதன் மூலம் இந்தியா தனது தார்மீக விழுமியங்களில் இருந்து பின்வாங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
 
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான முகமது சொஹ்ராப் கூறுகையில், “இந்தத் தீர்மானம் மனிதாபிமான அடிப்படையில் இருந்தது. மனிதாபிமானத்துடன் கூடிய வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
 
இது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முன்மொழியப்பட்ட தீர்மானம். இத்தகைய மனிதாபிமானப் பிரச்னை குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்ததன் மூலம், இந்தியா வரலாற்று ரீதியாக ஏற்றுக்கொண்ட தார்மீக நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது.
 
இது இந்திய நாகரிகத்தின் அடிப்படை மந்திரமாகவும் உள்ளது. இது இந்தியாவின் மனித விழுமியங்களில் இருந்து பின்வாங்குவதைப் போன்றது. இந்தியா தனது நாகரிக விழுமியங்களில் இருந்து பின்வாங்குகிறது என்பதே உலகிற்கு இதன்மூலம் அனுப்பப்பட்ட செய்தி,” என விமர்சித்தார்.
 
பேராசிரியர் சொஹ்ராப் கூறும்போது, ​​“பாலத்தீனர்களுக்கு தனி நாடு உருவாவதை ஆதரிப்பதே இந்தியாவின் கொள்கையாக இருந்து வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலிலும் இந்தியா இந்தக் கொள்கையை வெளிப்படுத்தியது. ஆனால் இப்போது தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் பங்கேற்கவில்லை என்பது இந்தியாவின் கொள்கை மாறி வருவதையே காட்டுகிறது,” என்று தன் கருத்தை முன்வைத்தார்.
 
எது எப்படி என்றாலும், இந்த நேரத்தில் இஸ்ரேலுடனான உறவுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், போரில் பாதிக்கப்பட்ட நட்பு நாட்டை இந்தியா கோபப்படுத்த விரும்பவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.
 
 
காஸா மீது கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
 
பேராசிரியர் முடாசிர் கமர் கூறுகையில், “இஸ்ரேலுடனான உறவை எந்த வகையிலும் கெடுக்க இந்தியா விரும்பாது. இதில் பல அம்சங்கள் உள்ளன. இந்தியா இஸ்ரேலுடன் மிக நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளது.
 
இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குகிறது என்பதுடன், பயங்கரவாதம் தொடர்பான தகவல்களும் பகிரப்படுகின்றன. இஸ்ரேலுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் வலுவாக மாறியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், இஸ்ரேலுடனான உறவை இந்தியா புறக்கணிக்க முடியாது,” என்று கூறினார்.
 
இந்தியாவின் நிலைப்பாடு மாறுமா?
அண்மையில் அறிவிக்கப்பட்ட 'இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தை' சேதப்படுத்துவதும் ஹமாஸ் தாக்குதலின் ஒரு நோக்கமாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் கூறினார்.
 
இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் முடாசிர் கமர், “ஐஎம்இசிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஹமாஸ் இந்தத் தாக்குதலை நடத்தியது என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையும் இந்தப் போரும் அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவை பாதிக்கலாம்,” என்றார்.
 
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் சமநிலையைப் பேணுவது எளிதல்ல என்று பேராசிரியர் சொஹ்ராப் கருதுகிறார்.
 
அவர் பேசியபோது, “ஹமாஸ் தாக்குதல் நடந்த உடனேயே, இந்திய பிரதமர் ட்வீட் செய்து இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். சில நாட்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகம் பாலத்தீனர்களுக்கு இந்தியாவும் துணை நிற்கிறது என்று அறிக்கை அளித்தது. இந்தியாவின் ராஜதந்திரத்தில் தற்போது ஒரு முரண்பாடு காணப்படுகின்றது.
 
"இந்த நிலைமை இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானது என்பதுடன் இந்தப் போர் மேலும் தொடர்ந்தால், ​​இந்தியா தனது தற்போதைய நிலைப்பாட்டைப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும்," என்றார்.
 
ஹமாஸ் படையினருக்கு எதிராக தரைவழித் தாக்குதல் தொடங்கிய பிறகு இந்தியாவின் நிலை மாறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
இந்தியாவில் சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு மக்கள் பெரும் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் பாலத்தீன மக்களுக்கு ஆதரவாகப் பதிவிட்ட பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பேராசிரியர் சொஹ்ராப் தொடர்ந்து பேசியபோது, ​​“இந்தியா தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற நிலையில், இந்தியா தனது பாரம்பரிய கொள்கைகளை சமரசம் செய்து வருகிறது,” என்றார்.
 
அதே நேரம், இந்தியாவின் தற்போதைய ராஜதந்திர சூழ்நிலையை, இந்தியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
முடாசிர் கமர் பேசியபோது, “அண்மைக் காலங்களில், இந்தியா அதன் வெளியுறவுக் கொள்கையில் அதன் நலன்களுக்குத் தெளிவாக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் இஸ்ரேலுடன் பெருமளவில் ஒருங்கிணைந்துள்ளன. சித்தாந்த ரீதியாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவு உள்ளது.
 
இருப்பினும், போர் தொடர்ந்து நீளும்போது அல்லது தற்போதைய சூழ்நிலைகள் மாறும்போது, ​​இந்தியாவின் பார்வையும் நிலைப்பாடும் மாறலாம்," என்றார்.
 
இதற்கிடையே, இஸ்ரேல் காஸாவில் தரைப்படை தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இந்தப் போர் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள மேலும் பல நாடுகளுக்கும் பரவும் ஆபத்தும் உள்ளது.
 
"இந்தப் போர் பல பகுதிகளுக்குப் பரவினால், அது தொடர்பான இந்தியாவின் கொள்கையும் மாறலாம்," என்கிறார் முடாசிர் கமர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments