Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு

Advertiesment
Afghanistan
, திங்கள், 23 அக்டோபர் 2023 (21:30 IST)
அசத்தலான பேட்டிங், நெருக்கடி தரும் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றால், சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான் அணி.
 
ஏற்கெனவே நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஷாக் அளித்த ஆப்கானிஸ்தான், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியையும் சாய்த்து மற்றொரு அதிர்ச்சியை உலக அணிகளுக்கு அளித்துள்ளது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடந்த அதே ஆடுகளம்தான் என்பதால், பாபர் ஆசம் யோசிக்காமல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
 
பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷஃபீக், இமாம் உல் ஹக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான் 2வது ஓவரிலிருந்து சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தது. வேகப்பந்துவீச்சில் பவுண்டரி அடித்த பாகிஸ்தான் பேட்டர்கள், சுழற்பந்துவீச்சைச் சமாளித்து ஆடுவதற்கு சிரமப்பட்டனர். அதிலும் முஜிபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய இருவரும் பாகிஸ்தான் ரன்ரேட்டை கட்டிப் போட்டனர்.
 
பிரதமர் மோதியுடன் மேடையேற மறுக்கும் கூட்டணிக் கட்சி முதலமைச்சர் - என்ன சொல்கிறார்?
 
அஸ்மத்துல்லா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் நவீன் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த பாபர்ஆசம், ஷஃபீக்குடன் இணைந்தார்.
 
பவர் ப்ளே ஓவரில் 2023ம் ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் அணி சிக்ஸரே அடிக்காமல் இருந்தது. மற்ற அணிகள் இந்த ஆண்டில் இதுவரை சராசரியாக 22 போட்டிகள் வரை விளையாடி, பவர் ப்ளேயில் குறைந்தபட்சம் ஒரு சிக்ஸராவது அடித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் இதுவரை ஒரு சிக்ஸர் கூட அடிக்காத நிலையில் முதல்முறையாக சிக்ஸர் அடித்தது. பவர்ப்ளே முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்தது.
 
அஸ்மத்துல்லா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் நவீன் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பாபர்ஆசம், ஷஃபீக்குடன் இணைந்தார்.
 
பாபர் ஆசம் களத்துக்குள் வந்த பின்பும் பாகிஸ்தான் ரன்ரேட் பெரிதாக உயரவில்லை. பாபர் ஆசம் மைதானத்துக்குள் நுழையும் போது, விக்ரம்-வேதா திரைப்படத்தின் பின்னணி இசை ஒலித்தது. இதை ரசிகர்களும் ரசித்து ஆரவாரம் செய்தனர், சில ரசிகர்கள் டி-ஜேவிடம் சென்று வேறு பாடல்களை இசைக்குமாறு கோரியவாறு ரசித்தனர்.
 
ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சுக்கு பாபர் ஆசமும், ஷஃபீக்கும் தொடர்ந்து ரன்கள் சேர்க்க சிரமப்பட்டனர். ஷபீக் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். நூர்அகமது வீசிய 23-வது ஓவரில் அப்துல்லா ஷஃபீக் 58 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். நூர்அகமது வீசிய 25-வது ஓவரில் மற்றொரு விக்கெட் விழுந்தது. ரிஸ்வான் வந்தவேகத்தில் 8 ரன்னில் முஜிபுர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
 
20 முதல் 30 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்டர்களை திணறவிட்டனர். முதல் 20 ஓவர்கள் வரை சராசரியாக 55ரன்கள் சேரத்த பாகிஸ்தான், 20 முதல் 30 ஓவர்கள் வரை 39 ரன்கள்தான் சேர்த்தனர்.
 
குறிப்பாக இளம் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது பாகிஸ்தான் பேட்டர்களுக்கு தண்ணிகாட்டினார் என்றேதான் கூற வேண்டம். அவருடைய பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் பேட்டர்கள் திணறினர்.
 
அரைசதம் அடித்த பாபர் ஆசமிற்கு சென்னை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆதரவைத் தெரிவித்தனர்.
 
இந்த உலகக் கோப்பைத் தொடரில் நடுப்பகுதி ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகவே பந்துவீசி வருகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஆப்கானிஸ்தான் நடுப்பகுதி ஓவர்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. சராசரியாக 5.31 ரன்கள்தான் வழங்கியுள்ளது. சவுத் ஷகீல் 25 ரன்னில் முகமது நபி பந்துவீச்சில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
பாபர் ஆசம் 68 பந்துகளில் அரைசதம் அடித்தார், அரைசதம் அடித்த பாபர் ஆசமிற்கு சென்னை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆதரவைத் தெரிவித்தனர். சவுத் ஷகீல் 25 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது நபி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பாபர ஆசம் 74 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
 
 
பாகிஸ்தான் கடைசி 10 ஓவர்களில்தான் ஓரளவு ரன்களைச் சேர்த்தது. சதான் கான்(40), இப்திகார் அகமது(40) ரன்கள் சேர்த்தனர்.கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நூர் அகமது, இப்திகார், சதாப் விக்கெட்டை வீழ்த்தினார்.
 
50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது.
 
ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், நவீன் உல்ஹக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குறிப்பாக முகமது நபி 10 ஓவர்கள் வீசி 31 ரன்கள்தான் வழங்கி ஒருவிக்கெட்டை வீழ்த்தினார். மற்ற சுழற்பந்துவீச்சாளர்களான ரஷித்கான், நூர் அகமது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சராசரியாக 4.5 ரன்களே வழங்கி பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தனர்.
 
38 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களே பந்துவீசினர். இதில் 114 பந்துகள் டாட்பந்துகளாகும். அதாவது 19 ஓவர்களில் ரன் ஏதும் வழங்கவில்லை. சுழற்பந்துவீச்சாளர்கள் வீசிய 38 ஓவர்களில் 19 ஓவர்களில் ரன் ஏதும் பாகிஸ்தான் பேட்டர்கள் எடுக்கவில்லை.
 
குர்பாஸ், ஜாத்ரன் இருவரும் அற்புதமான தொடக்கத்தை அளித்தனர்
 
283 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. குர்பாஸ், ஜாத்ரன் இருவரும் அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து விளாசிய குர்பாஸ், ஜாத்ரன் இருவரும் ரன்ரேட்டை குறையவிடாமல் 6 ரன்னில் கொண்டு சென்றனர். 8 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 50 ரன்களையும், 10 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 60 ரன்களையும் சேர்த்தது.
 
ஜாத்ரன் 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய குர்பாஸ் 38 பந்துகளில் அரைசதம் விளாசினார். 15.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 100 ரன்களையும், 24.5 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டினர்.
 
முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்த நிலையில் குர்பாஸ், ஜாத்ரன் கூட்டணி பிரிந்தது, அருமையான அடித்தளத்தை இருவரும் அமைத்துக் கொடுத்தனர். குர்பாஸ் 65 ரன்கள் சேர்த்தநிலையில் அப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
 
அடுத்து வந்த ரஹ்மத் ஷா, ஜாத்ரனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினர். தேவைப்படும் நேரத்திலும், மோசமான பந்துகளைத் தேர்ந்தெடுத்து இருவரும் பவுண்டரிகளை விளாசினர். அதேநேரம் விக்கெட்டுகளுக்கு இடையே ஒரு ரன், 2 ரன்களைச் சேர்ப்பதிலும் இருவரும் தவறவில்லை.
 
தந்தை மரணத்திற்கு பழிக்குப்பழி: மாமியார் குடும்பத்தையே சிதைத்த மருமகள் - என்ன செய்தார் தெரியுமா?
 
ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் களத்தில் வலுவாக நின்றதால், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது.
 
முதல் விக்கெட்டை வீழ்த்தியபின், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாத்ரன், ரஹ்மத்ஷா கூட்டணியைப் பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. ஜாத்ரன் 87 ரன்கள் சேர்த்தநிலையில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து, ஜாத்ரன், ரஹ்மத்ஷா இருவரும் பிரிந்தனர்.
 
அடுத்துவந்த கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி, ரஹ்மத் ஷாவுடன் சேர்ந்தார். இருவரும் இணைந்து ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றனர். 38 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களை எட்டியது. நிதானமாக பேட் செய்த ரஹ்மத் ஷா 58 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
 
ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் களத்தில் வலுவாக நின்றதால், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. அழுத்தம் அதிகரிக்க, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தவறு செய்து மோசமான பந்துவீச்சை அவ்வப்போது வீசினர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பவுண்டரிகளை விளாசி ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் வெற்றியை நெருங்கினர்.
 
கடைசி 5 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 30 ரன்கள்தான் தேவைப்பட்டது. விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் திருப்புமுனையை ஏற்படுத்த முடியும் என்ற கட்டாயத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
 
ஆனால், ரஹ்மத் ஷா, ஷாஹிதி இருவரும் பேட் செய்தவிதம் அதற்கு வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டது. உசாமா மிர் வீசிய 46-வது ஓவரில் ஷாஹிதி பவுண்டரி உள்ளிட்ட 11 ரன்கள் சேர்ததார். 47-வது ஓவரில் 8 ரன்கள் சேர்த்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது.
 
ஹசன் அலி வீசிய 48-வது ஓவரில் ரஹ்மத் ஷா சிக்ஸர் விளாசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். வெற்றிக்கு 12 பந்துகளில் 4 ரன்களே ஆப்கானிஸ்தானுக்குத் தேவைப்பட்டது. 49-வது ஓவரில் 3 ரன்கள் சேர்த்தநிலையில் ஷாகிதி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
 
49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றனர். ரஹ்மத் ஷா 77 ரன்களிலும், ஷாகிதி 48 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 96 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
 
 
ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்களும், பேட்டர்களுமே முக்கியக் காரணம். அதிலும் தொடக்க விக்கெட்டுக்கு குர்பாஸ், ஜாத்ரன் அமைத்துக் கொடுத்த அடித்தளம், 3வது விக்கெட்டுக்கு ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா சேர்த்த 96 ரன்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். ஆட்டநாயகன் விருது இப்ராஹிம் ஜாத்ரனுக்கு வழங்கப்பட்டது.
 
ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங்கில் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தினர். அதிலும் இந்த ஆட்டத்தில் 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லாவின் முடிவு துணிச்சலானது. கேப்டன் ஹஸ்மதுல்லா வைத்த நம்பிக்கையை 4 சுழற்பந்துவீச்சாளர்களும் நிறைவேற்றிக் கொடுத்தனர்.
 
ஆப்கானிஸ்தான் அணியிடம் இருந்து இவ்வளவு உலகத்தரம் வாய்ந்த, நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சை பாகிஸ்தான் பேட்டர்கள் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதிலும் முகமது நபியின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸாக இருந்தது.
 
இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே அதிகமான டாட் பந்துகள் விட்டாலும், பவுண்டரி, சிக்ஸர் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி எடுத்ததால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 114 ரன்கள் டாட் பந்துகள் விட்டனர் என்றால், ஆப்கானிஸ்தான் அணி 144 பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. சிக்ஸர் பவுண்டரிகள் மூலமே ரன்களைச் சேர்த்தனர். 3 சிக்ஸர்களையும், 28 பவுண்டரிகளையும் விளாசினர்.
 
பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் இந்த ஆட்டத்தில் படுமோசமாக இருந்தது. கடைசி 10ஓவர்களில் இப்திகார், சதாப்கான் அதிரடியாக ஆடாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஸ்கோர் 220 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
 
பாகிஸ்தான் பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடிப் பழகியிருக்கலாம் என்றாலும், இதுபோன்ற முதல்தரமான, நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பேட் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிலும் நூர் முகமது போன்ற ரிஸ்ட் ஸ்பின்(சினா மென்) பந்துவீச்சு பாகிஸ்தான் பேட்டர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
 
பீல்டிங் என்றாலே பாகிஸ்தானைக் கண்டு ரசிகர்கள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். அதே கதைதான் இன்றும் நடந்தது. பாகிஸ்தான் வீரர்கள் கேட்ச்சைக் கோட்டைவிட்டது, பவுண்டரி எல்லையில் பவுண்டரியை வழங்கியது, சிங்கிள் ரன்களை வழங்கியது என பீல்டிங் பயிற்சி எடுக்காமல் தெருவில் விளையாடும் சிறுவர்கள் போன்று மோசமாக பீல்டிங் செய்தனர். சர்வேத போட்டிகளில் பங்கேற்று, இப்படி கவனக்குறைவான, ரன்களை கோட்டை விடும் பீ்ல்டிங் பாகிஸ்தான் அணியின் மோசமான பலவீனம்.
 
குறிப்பாக பாபர் ஆசம், குனிந்து, விழுந்து பந்தைத் தடுப்பதற்கு மிகவும் யோசித்தார். பந்து அவரை கடந்து சென்றால்கூட பிடிக்க முயற்சி செய்யாமல் அடுத்த பீல்டரை நோக்கி கையை உயர்த்துவது, கோபப்படுவது என கேப்டனே மோசமான பீல்டிங்கிற்கு உதாரணமாக இருந்தார்.
 
பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி சுமார் ரகமாகத்தான் இருந்தது. பாபர் ஆசம் தனிப்பட்ட முறையி்ல் சிறந்த பேட்டராக இருந்தாலும், இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் கேப்டனுக்குரிய பொறுப்புணர்வுடன் பெரிய ஸ்கோருக்கு நகர்த்த வேண்டும். ஆனால், பாபர் ஆசம் பேட்டிங் மிகுந்த மந்தமாக இருந்தது.
 
சென்னை ஆடுகளத்தைப் பற்றி பாபர் ஆசமிற்கு நன்கு தெரியும். இருப்பினும் கூடுதல் சுழற்பந்துவீச்சாளருடன் வராமல் வழக்கமான பந்துவீச்சாளர்களுடனே களமிறங்கினார். பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களும், சேப்பாக்கம் போன்ற ஆடுகளத்தில் பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தாமல் ஒரே மாதிரியாகப் பந்துவீசியது, ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு அல்வா சாப்பிட்டதுபோன்று இருந்தது.
 
சென்னையில் ரசிகர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்?
 
சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி என்பதால், ஆப்கானிஸ்தான் அணி 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஆட்டம் தொடங்கும்போது, 15 ஆயிரம் ரசிகர்கள் இருந்தநிலையில் மாலையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமாகியது.
 
சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் இருந்ததைவிட ஆப்கானிஸ்தான் வீரர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். ஆப்கானிஸ்தான் தேசியக் கொடி ஆங்காங்கே தெரிந்தது, ஆப்கானிஸ்தான் ஜெர்ஸி அணிந்த ரசிகர்களும் இருந்தனர். அதேநேரம், பாபர் ஆசம், ஹசன் அலி, ஹரிஸ் ராஃப் ஆகியோருக்கும் சென்னை ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.
 
சென்னை மண்ணில் வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்
 
இதுவரை பாகிஸ்தானுடன் 7 முறை மோதிய ஆப்கானிஸ்தான் ஒருமுறை கூட வென்றதில்லை. ஆனால், 8-வது முறையாக இன்று மோதி வெற்றி பெற்று வரலாற்றை திருத்தி எழுதியது.
 
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 2வெற்றிகள், 3 தோல்விகள் என மொத்தம் 4 புள்ளிகளுடன், 6-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் சற்று மேலே பாகிஸ்தான் இருப்பதால், ஆப்கானுக்கு மேலே 5வது இடத்தில் நீடிக்கிறது. இரு அணிகளுமே நிகர ரன்ரேட்டில் மைனஸில்தான் இருக்கிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக் கடலில் ஹாமூன் புயல்-இந்திய வானிலை ஆய்வு மையம்